விதவிதமான அலங்காரத்தில் ஒய்யாரமாக வலம் வரும் திருநங்கைகள் | Koothandavar temple | | Villupuram
விழுப்புரம் அருகே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள கூத்தாண்டவர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 18 நாட்கள் விமர்சையாக நடப்பது வழக்கம். இதில் லட்சக்கணக்கான திருநங்கைகள் பங்கேற்பதால் திருவிழா களைகட்டும். இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா ஏப்ரல் 29ம் தேதி சாகை வார்த்தலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 13ம் தேதி சாமி கண் திறத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. அன்றைய தினம் திருநங்கைகள் தங்களை மணப்பெண்கள் போல் அலங்கரித்துக்கொண்டு கோயில் பூசாரி கையால் தாலி கட்டிக்கொள்வார்கள். மறுநாள் 14ம் தேதி சித்திரை தேரோட்டம் நடக்கிறது. தேர் அழிகளம் நோக்கி புறப்பட்டதும் திருநங்கைகள், தாலியை அறுத்துக்கொண்டு வெள்ளை சேலை அணிவார்கள். இந்த ஆண்டு திருவிழாவை காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் திருநங்கைகள் விழுப்புரம் நகருக்கு வரத்தொடங்கியுள்ளனர். பளபளப்பான உடைகளில் தங்களை கூடுதல் அழகு செய்துகொண்டு நகரில் ஒய்யாரமாக வலம் வந்த வண்ணம் உள்ளனர். சில திருநங்கைகள் சினிமா நடிகைகளையே மிஞ்சும் அளவிற்கு விதவிதமான உடைகளை அணிந்தபடி வலம் வருகின்றனர்.