கோவை சிறுமி சம்பவத்தில் வெளியானது முழு விவரம் | kovai girl case | coimbatore girl case | 7 arrested
கோவை சிறுமி சம்பவத்தில் பகீர் அன்று இரவு என்னென்ன நடந்தது? பதற வைக்கும் முழு பின்னணி கோவையில் 17 வயது சிறுமியை கல்லூரி மாணவர்கள் 7 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் தமிழகத்தையே உலுக்கிப்போட்டுள்ளது. இந்த கொடூர காரியத்தை செய்த 7 கல்லூரி மாணவர்களையும் போலீசார் கைது செய்து விட்டனர். இப்போது சம்பவம் பற்றிய முக்கிய விவரம் மற்றும் கைதானவர்கள் பெயர் விவரத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர். இது பற்றிய விவரம் வருமாறு: கோவையை சேர்ந்த 17 வயது சிறுமி, பிளஸ் 2 படிப்பை பாதியில் நிறுத்தி வீட்டில் இருந்தார். சிறுமியின் பெற்றோர் கூலி வேலை செய்து வருகின்றனர். சிறுமி அவ்வப்போது சோசியல் மீடியாவை பயன்படுத்துவது வழக்கம். இந்த நிலையில் சிறுமியின் தாத்தா, சில வாரம் முன்பு இறந்தார். இதனால் தன் பாட்டிக்கு துணையாக, இரவில் அதே பகுதியில் உள்ள பாட்டி வீட்டுக்கு உறங்க செல்வது வழக்கம். அப்படி தான் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை பாட்டி வீட்டுக்கு புறப்பட்டார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் சிறுமி வரவில்லை. இதனால் பெற்றோருக்கு சிறுமியின் பாட்டி தகவல் தெரிவித்தார். நீண்ட நேரம் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. இதனால் பெற்றோரும் பாட்டியும் போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து போலீசார் சிறுமியை தீவிரமாக தேடி வந்தனர். இதற்கிடையே மறுநாள் தனது வீட்டு பக்கத்தில் சிறுமி நிற்பதை பாட்டி பார்த்தார். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கடுமையாக சோர்வுடன் காணப்பட்ட சிறுமியை, பெற்றோர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். அவரிடம் பெண் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தான் தனதுக்கு நேர்ந்த கொடுமையை சொல்லி சிறுமி கதறினாள். சோசியல் மீடியாவில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் அறிமுகமானார்கள். நட்பு ரீதியாக அவர்களிடம் பழகினேன். நேரில் சந்திக்க வேண்டும் என்றனர். பின்னர் 2 பேரும் பைக்கில் வந்து சந்தித்தனர். புதூர் பகுதியில் தாங்கள் வசிக்கும் வீட்டுக்கு பைக்கில் அழைத்து சென்றனர். அங்கு மேலும் 5 கல்லூரி மாணவர்கள் இருந்தனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க முடியவில்லை. 7 பேரும் சேர்ந்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமி அழுதாள். சம்பவத்துக்கு பிறகு இடிந்து போன சிறுமியை அழைத்து சென்ற அதே மாணவர்கள் 2 பேரும், மீண்டும் பைக்கில் ஏற்றி பாட்டி வீட்டு பக்கத்தில் விட்டு சென்று இருக்கின்றனர். சிறுமி கொடுத்த தகவலின் பேரில் கோவை புதூர் தனியார் கல்லூரிகளில் படிக்கும் ஜெபின் வயது 20, ரக்ஷித் வயது 19, அபினேஸ்வரன் வயது 20, தீபக் வயது 20, யாதவ ராஜ் வயது 19, முத்துநாகராஜ் வயது 19, நிதிஷ் வயது 20 ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.