கோயிலை சுற்றி இறைச்சி உணவு விற்க மக்கள் எதிர்ப்பு
கோவை, கணபதி அருகே உடையாம்பாளையத்தில், ஆபிதா-ரவிக்குமார் தம்பதி தள்ளுவண்டியில் மாட்டிறைச்சி பிரியாணி கடை நடத்தி வருகின்றனர். நேற்று அவர்களது கடைக்கு சென்ற பாஜ ஓபிசி அணி மாவட்ட செயலாளர் சுப்ரமணி, அருகே கோயில் இருப்பதால் மாட்டிறைச்சி உணவு விற்க கூடாது என்றும் வேறு இடத்திற்கு செல்லுமாறும் அதட்டி, கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, தம்பதியினருடன் சேர்ந்து கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்டோர் சுப்ரமணி மீது துடியலூர் காவல் நிலையம் மற்றும் கமிஷனர் சரவண சுந்தரிடம் புகார் அளித்தனர். பாஜ நிர்வாகி சுப்ரமணி மீது சட்டத்திற்கு புறம்பாக தடுத்தல், மோதல் விரோதத்தை தூண்டும் வகையில் செயல்படுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதியப்பட்டது. இதை கண்டித்தும், கோயில் அருகே மாட்டிறைச்சி கடை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் உடையாம்பாளையம் பகுதி மக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.