உயிரை காப்பாற்ற சேலம் மருத்துவமனைக்கு மாற்றம்
கைதுக்கு பயந்து எலி பேஸ்ட் சாப்பிட்ட சிவராமன்! பாலியல் வழக்கில் பரபரப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர், காந்தி குப்பத்தில் உள்ள பள்ளியில் 2 வாரங்களுக்கு முன்பு என்சிசி முகாம் நடந்தது. 17 மாணவிகள் கலந்து கொண்டனர். அதில் போலி என்சிசி பயிற்சியாளர் சிவராமன், 8 ம் வகுப்பு மாணவியை, பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் 13 மாணவிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாகி உள்ளனர். என்சிசிக்கும் சிவராமனுக்கும் எந்த தொடர்பும் இல்லை. போலி ஆவணங்களை காட்டி முகாமை நடத்தியது விசாரணையில் தெரிந்தது. இச்சம்பவம் தொடர்பாக, சிவராமன், பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் உட்பட 11 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். கடந்த 19ம் தேதி கைதான சிவராமன், போலிசிடம் இருந்து தப்பியோட முயன்றபோது கீழே விழுந்து கால் முறிந்தது. கிருஷ்ணகிரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தார். கைது செய்யப்படுவதற்கு முன்பு, 16, 18ம் தேதிகளில் சிவராமன் தற்கொலை செய்வதற்காக, எலி பேஸ்ட் சாப்பிட்டு இருக்கிறார். இந்த விஷயத்தை போலிசிடம் அவர் சொல்லியிருக்கிறார். மருத்துவ பரிசோதனையில் சிவராமன் சொன்னது உண்மை என தெரிந்ததால், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தற்போது சேர்க்கப்பட்டு உள்ளார்.