ராமதாஸ்-அன்புமணியிடம் ஐகோர்ட் நீதிபதி சமரச பேச்சு madras High court anbumani ramadoss pmk fight ju
கடந்த ஆண்டு இறுதியில் நடந்த பாமக பொதுக்குழு கூட்டத்தில் கட்சி நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகன் கட்சித் தலைவர் அன்புமணிக்கும் திடீரென மோதல் வெடித்தது. பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கி விட்டேன்; இனி நானே தலைவர்; அன்புமணி செயல் தலைவராக நீடிப்பார் என ராமதாஸ் அறிவித்தார். ஆனால், என்னை நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என அன்புமணி பதிலடி கொடுத்தார். இருவரும் கடந்த சில மாதங்களாக மாறி மாறி கட்சிக்கு நிர்வாகிகளை நியமனம் செய்து வருகின்றனர். அன்புமணி பக்கம் நிற்பவர்களை ராமதாஸ் கட்சியை விட்டு நீக்குகிறார். ராமதாசுடன் இருப்பவர்களை அன்புமணி நீக்கி வருகிறார். இதனால் கட்சிக்குள் குழப்பம் அதிகரித்துள்ள நிலையில், பாமக பொதுக்குழு கூட்டம் வரும் 17ம்தேதி புதுச்சேரி அருகே உள்ள தனியார் ஓட்டலில் நடக்கும் என ராமதாஸ் அறிவித்துள்ளார். அதற்கு போட்டியாக வரும் 9ம்தேதி மாமல்லபுரத்தில் பொதுக்குழு கூட்டம் நடக்கும் என அன்புமணி அறிவித்தார். இதைத் தொடர்ந்து, மகனுக்கு எதிராக கோர்ட்டை நாடினார், ராமதாஸ். அன்புமணியின் பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கேட்டு ராமதாஸ் தரப்பைச் சேர்ந்த மாநில பொதுச் செயலாளர் முரளி சங்கர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. ராமதாஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதங்களை முன் வைக்க வந்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், நான் உங்களிடம் ஒரு கோரிக்கை வைக்க விரும்புகிறேன் என்றார். ராமதாஸ் தரப்பு வழக்கறிஞரிடம் ஆனந்த் வெங்கடேஷ் கூறியதாவது: பாமக நலன் கருதி ராமதாஸ், அன்புமணி இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்த போகிறேன். இருவரிடமும் நான் தனியாக பேச வேண்டும். அவர்களிடம் நான் பேசும்போது கட்சிக்காரர்கள், வழக்கறிஞர்கள் யாரும் உடன் இருக்க கூடாது. ராமதாஸ், அன்புமணி இருவரும் இன்று மாலை 5.30 மணிக்கு கோர்ட்டில் ஆஜராக வேண்டும். இன்று மாலை 5.30 மணிக்கு எனது அறைக்கு இருவரும் வர வேண்டும். உடனே ராமதாஸை கிளம்ப சொல்லுங்கள். இது எனது வேண்டுகோள் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறினார். ராமதாஸ், அன்புமணி சண்டை உச்ச கட்ட த்தை எட்டியுள்ள நிலையில், அவர்களிடையே சமரசம் ஏற்படுத்த ஐகோர்ட் நீ திபதி ஆனந்த் வெங்கடேஷ் எடுத்துள்ள முயற்சி தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில் பாமகவினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.