ஆடர் போட்டது கட்சியா, அரசா? வழக்கறிஞரை மடக்கிய நீதிபதிகள் Madras High Court fined lawyer
தமிழக அரசு துறைகளின் முக்கிய திட்டங்கள், தகவல்களை செய்தி ஊடகங்கள் வாயிலாக, உரிய நேரத்தில் விரைவாக பொது மக்களுக்கு எடுத்துரைக்கவும், அரசு துறைகளிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவும் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ராதாகிருஷ்ணன், ககன்தீப் சிங் பேடி, தீரஜ் குமார், அமுதா ஆகியோரை, தமிழக அரசின் செய்தி தொடர்பாளர்களாக நியமித்து முதல்வர் ஸ்டாலின் கடந்த மாதம் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை சேலையூரை சேர்ந்த வழக்கறிஞர் டி.சத்தியகுமார், சென்னை ஐகோர்ட்டில் பொது நலன் வழக்கு தொடர்ந்தார். முறையாக அரசாணை பிறப்பித்து, அரசிதழில் வெளியிடாமல், உரிய நடைமுறைகளை பின்பற்றாமல், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை, அரசின் செய்தி தொடர்பாளர்களாக நியமித்தது சட்டப்படி செல்லாது. பத்திரிகை செய்திக் குறிப்பு மூலமாக 4 அதிகாரிகள் செய்தி தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என அறிவிக்க வேண்டும் என மனுவில் சத்தியகுமார் கூறியிருந்தார். இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு முன் வைத்த வாதங்கள் வருமாறு: அரசு செய்தி தொடர்பாளர்களாக 4 ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்ததன் பின்னணியில் மறைமுகமாக அவர்களை அரசியல் கட்சி பணிக்கு பயன்படுத்தும் உள்நோக்கம் இருக்கலாம் என சந்தேகம் எழுகிறது. ஐஏஎஸ் அதிகாரிகளை அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்களாக நியமிப்பதற்கு கவர்னர் ஒப்புதல் அளித்து, அதன்பிறகு அரசாணை பிறப்பிக்கப்பட்டதா என எந்த குறிப்பும் தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் இல்லை. அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்தாலோசித்த பிறகு இந்த நியமனம் செய்யப்பட்டதா என்பது குறித்தும் தகவல் இல்லை. இதுபோன்ற நியமனங்களைச் செய்வதில் அரசு தனது வரம்பை மீறி செயல்பட்டு விடக்கூடாது. ஏனென்றால், செய்தி தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் அரசியல் கட்சியின் சாதனைகளை விளம்பரப்படுத்தும் வேலையை செய்து விடக்கூடாது என்பதை உறுதி செய்யவே இந்த பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசுக்கு செய்தித் தொடர்பாளர்கள் நியமிக்கப்படுவது வரலாற்றில் இது முதல்முறை. எனவே, இந்த செயல்முறை அரசியலமைப்புச் சட்டத்தின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, அந்த சோதனையை கடந்து வர வேண்டியது அவசியம். என மனுதாரர் தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன. மனுதாரர் தரப்புவாதத்தை கேட்ட நீதிபதிகள், ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனத்தில் எந்த சட்ட விதி மீறலும் நடக்கவில்லை என கூறி, வழக்கின் ஆரம்ப நிலையிலேயே மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இந்த 4 ஐஏஎஸ் அதிகாரிகளும் அரசியல் கட்சிக்கு செய்தித் தொடர்பாளர்களாக நியமிக்கப்படவில்லை. இவர்கள் அரசு அலுவல் ரீதியாகவே நியமிக்கப்பட்டுள்ளனர். அரசின் உத்தரவின் பேரிலேயே நியமனங்கள் நடந்துள்ளது. அரசியல் கட்சியின் உத்தரவின் பேரில் நடக்கவில்லை. எனவே, ஐஏஎஸ் அதிகாரிகளை செய்தித் தொடர்பாளர்களாக நியமிப்பதற்கு தடை விதிக்க எந்த சட்டத்திலும் இடமில்லை. ஆகவே, ஐஏஎஸ் அதிகாரிகளை அரசு செய்தித் தொடர்பாளராக நியமித்தது செல்லும் என நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. செய்தி தொடர்பாளர்கள் நியமனத்துக்கு எதிராக பொதுநலன் வழக்கை தாக்கல் செய்த வழக்கறிஞர் சத்யகுமாருக்கு, ரூ.1லட்சம் அபராதம் விதித்தும் நீதிபதிகள் அதிரடி உத்தரவை பிறப்பித்தனர்.