போலீஸ் கடமை தவறினால் சட்டம் தண்டிக்கும்: ஐகோர்ட் எச்சரிக்கை | HC orders DGP | Suspend DSP
விழுப்புரம், வானுார் பகுதியில் உள்ள, 12 ஏக்கர் நிலம் தொடர்பாக, ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த செந்தாமரை, மாற்று சமூகத்தை சேர்ந்த வீராசாமி இடையே பிரச்னை ஏற்பட்டது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த மாவட்ட கோர்ட், நிலம் செந்தாமரைக்கே சொந்தமானது என்று தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டும் அந்த உத்தரவை உறுதி செய்தது. இந்நிலையில், வேறு சமுதாயத்தை சேர்ந்த கேசவன் என்பவர், அந்த நிலத்துக்கு உரிமை கோரி, திண்டிவனம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அத்துடன் செந்தாமரை மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மிரட்டலும் விடுத்தார். இதுபற்றி, 2023ல் வானுார் போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த ஆண்டு நிலத்தை பார்வையிட சென்ற, செந்தாமரையின் உறவினரை ஜாதி பெயரைச் சொல்லி திட்டி, கடுமையாக தாக்கி, மொபைல் போனை கேசவன் பறித்துள்ளார். ஜாதியை சொல்லி திட்டியதாக அளித்த புகார் மீது, வழக்குப் பதிவு செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆனால், கேசவன் தரப்பில் அளிக்கப்பட்ட புகார் மீது, ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து செந்தாமரை தரப்பினர் ஐகோர்ட் சென்றனர். ஜாதி பெயரை சொல்லி திட்டி மிரட்டல் விடுத்த, கேசவன் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோட்டக்குப்பம் சரக டி.எஸ்.பி.,க்கு உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் அசோக்குமார், கோட்டக்குப்பம் டி.எஸ்.பி., உரிய விசாரணை நடத்தாமல், ஒருதலைப் பட்சமாக செயல்படுகிறார் என தெரிவித்தார். இதையடுத்து வன்கொடுமை தடுப்பு சட்ட விதிமுறைகளை பின்பற்றாத டி.எஸ்.பி சுனிலை சஸ்பெண்ட் செய்து கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய, டி.ஜி.பிக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதே போல கடந்த 2018ல் சென்னை சூளைமேடு பகுதியில் 92 சவரன் நகை காணாமல் போன வழக்கும் நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது.