மதுரை ஆதீனம் வழக்கு; செப்., 15 வரை போலீசுக்கு அவகாசம் | Madurai Atheenam case | High Court
மே 2ம் தேதி சென்னை காட்டாங்கொளத்தூரில் நடந்த உலக சைவ சித்தாந்த மாநாட்டில் பங்கேற்க மதுரை ஆதீனம் காரில் சென்றார். அப்போது உளுந்தூர்பேட்டை அருகே அவரது கார் விபத்தில் சிக்கியது. இது தன்னை கொல்ல நடந்த சதி என்றும், விபத்தை ஏற்படுத்திய காரில் இருந்தவர்களின் அடையாளங்களையும் கூறியிருந்தார். ஆதினம் மத மோதலை உருவாக்கும் வகையில் கூறி இருப்பதாக சென்னையை சேர்ந்த வக்கீல் ராஜேந்திரன் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். மதுரை ஆதீனம் மீது சைபர் கிரைம் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்தனர். அவருக்கு முன் ஜாமீன் வழங்கிய கோர்ட், அவர் வசிக்கும் இடத்திற்கே சென்று விசாரணை நடத்த உத்தரவிட்டது. வழக்கு தொடர்பாக மதுரை ஆதீனத்திடம் சைபர் கிரைம் போலீசார் சென்ற மாதம் நேரில் விசாரித்தனர். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த அவரிடம் படுத்த நிலையிலேயே போலீசார் விசாரித்ததை பலரும் கண்டனம் தெரிவித்தனர். வழக்கை ரத்து செய்ய கோரி மதுரை ஆதினம் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு செய்யப்பட்டது. வழக்கு நேற்று நீதிபதி சதீஷ் குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆதீனத்தின் மனுவுக்கு பதில் அளிக்க போலீசாருக்கு செப்., 15 வரை அவகாசம் வழங்கப்பட்டது. அதுவரை ஆதீனத்துக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எதுவும் எடுக்க கூடாது என நீதிபதி உத்தரவிட்டார்.