மதுரை, ஊட்டியில் விஸ்வரூபம்: மாநகராட்சி ஆபீஸ் மூடல் | Madurai corporation | Sanitary workers protest
நாங்க என்ன கொத்தடிமைகளா...? பொங்கும் தூய்மை பணியாளர்கள் சென்னையை அடுத்து மதுரையில் போராட்டம் சென்னையில் தூய்மைப்பணியை ராம்கி தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கும் மாநகராட்சி நிர்வாகத்தின் முடிவை எதிர்த்து தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 13 நாளாக போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்களை கடந்த 13ம் தேதி நள்ளிரவில் போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர். சென்னை தூய்மை பணியாளர்களின் போராட்டத்தால் உத்வேகம் பெற்று, மற்ற நகரங்களிலும் தூய்மை பணியை தனியாரிடம் ஒப்படைக்கக்கூடாது என வலியுறுத்தி தொழிலாளர்கள் போராட துவங்கியுள்ளனர். மதுரை மாநகராட்சியில் 4 ஆயிரம் தூய்மை பணியாளர்கள் உள்ளனர். தூய்மை பணியை Ourland தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்ததை கண்டித்தும், ஊதிய உயர்வு, பணிநிரந்தரம், போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் தூய்மை பணியாளர்கள் இன்று காலவரையற்ற போராட்டத்தில் குதித்தனர். தூய்மை பணி செய்யும் தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பு இல்லை; பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை; பாத்ரூம் வசதி கூட இல்லை; எங்களை அடிமைபோல் நடத்துகின்றனர். முதல்வர் ஸ்டாலின்தான் நீதி வழங்க வேண்டும் என தூய்மை பணியாளர்கள் கூறினர். மதுரை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக கட்சிகள், மற்ற அமைப்பினர் வந்து விடக்கூடாது என்பதற்காக, மதுரை மாநகராட்சி அலுவலகத்தின் 2 நுழைவாயில்கள் மூடப்பட்டுள்ளன. திறந்திருக்கும் ஒரு நுழைவாயில் முன் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநகராட்சி ஆபீசுக்கு வரும் பொதுமக்கள் விசாரணைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். நீலகிரி மாவட்டத்திலும் தூய்மை பணியாளர்கள் போராட்டம் வெடித்துள்ளது. ஊட்டியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் கொட்டும் மழையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு அரசு நிர்ணயித்த ஊதியத்தை ஒப்பந்ததாரர்கள் வழங்குவதில்லை. PF, ESI வசதிகளை செய்து தருவதில்லை என குற்றம்சாட்டினர். இதை உள்ளாட்சி நிர்வாகங்கள் கண்டு கொள்ளாததால் போராட்டத்தில் குதித்துள்ளோம்; கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராடுவோம் என ஆவேசத்துடன் கூறினர்.