மதுரை-அபுதாபி விமானத்தில் பைலட் அமர்க்களம் | Madurai To Abu Dhabi Flight
மதுரையில் இருந்து இலங்கை, துபாய் ஆகிய நாடுகளுக்கு மட்டுமே பயணிகள் விமானம் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் அபுதாமி செல்லும் பயணிகள் மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் அதிகம் இருந்தும் நேரடி விமானம் இயக்கப்படாமல் இருந்தது. தற்போது அவர்களின் கோரிக்கையை ஏற்று மதுரையில் இருந்து அபுதாபிக்கு இண்டிகோ விமானம் பயணத்தை துவங்கியுள்ளது. இந்த விமானம் வாரத்தில் 3 நாட்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும். இந்த நாட்களில் காலை 7.20க்கு அபுதாபியில் இருந்து புறப்பட்டு, மதியம் 1.05 மணிக்கு மதுரை வந்து சேரும். அதே போல மதுரையில் இருந்து மதியம் 2.35க்கு புறப்பட்டு மாலை 5.20க்கு அபுதாபி சென்றடையும். ஜூன் 13ம் தேதி முதல்முறையாக மதுரையில் இருந்து அபுதாபி விமானம் கிளம்பிய போது பைலட் தமிழில் பேசி அசத்தினார். நானும் மதுரைக்காரன் தான். பயணத்தை என்ஜாய் பண்ணுங்க. அதுக்குனு நம்ம ஊர் பிளைட் தானேன்னு ஜிகர்தண்டா, பருத்திப்பால் வேணும்னு கேட்டுறாதீங்க. அதெல்லாம் இங்க கிடைக்காது என ஜாலியாக பேசினார். வழக்கமாக புதிய விமான இயக்கம் துவங்கும் போது, ஏர்போர்ட்டில் தண்ணீர் பீய்ச்சி வரவேற்பு நிகழ்ச்சிகள் நடக்கும். ஆனால் ஆமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதால் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் எதுவும் இல்லாமல் மதுரை-அபுதாபி விமானம் இயக்கப்பட்டது.