பக்தர்கள் வருகை அதிகரிக்கும் சூழலில் அடுத்தடுத்த சம்பவத்தால் அதிர்ச்சி | Maha Kumbhmela | Prayagraj
மகா கும்பமேளாவில் மீண்டும் பற்றிய தீ தீக்கிரையான கூடாரங்கள் உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் ஜனவரி 13ல் மகா கும்பமேளா துவங்கியது. அன்று முதல் தினமும் லட்சக்கணக்கானோர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். ஜனவரி 13 பவுர்ணமி, 14ம் தேதி மகர சங்கராந்தி, 29ம் தேதி மவுனி அமாவாசை, பிப்ரவரி 3 வசந்த பஞ்சமி என நான்கு முக்கிய நாட்களிலும், கோடிக்கணக்கானோர் புனித நீராடினர். இதற்கிடையே பிரயாக்ரஜ் செக்டார் 18ல் இஸ்கான் அமைப்பின் சார்பில் அமைந்துள்ள கூடாரத்தில் இன்று திடீரென தீ பிடித்தது. தீ மளமளவென அடுத்தடுத்த கூடாரங்களுக்கும் பரவியது. 8 தீயணைப்பு வாகனங்களை சேர்ந்த வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அதற்குள் 20க்கும் மேற்பட்ட கூடாரங்கள் தீயில் கருகின. எனினும், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தீயணைப்பு துறை தலைமை அதிகாரி பிரமோத் சர்மா கூறினார். இது குறித்து வழக்கு பதிந்த பிரயாக்ராஜ் போலீசார் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர். இதற்கு முன் ஏற்கனவே, ஜனவரி 19ம் தேதி கும்பமேளா கூடாரத்தில் சிலிண்டர் வெடித்ததில் தீ பரவி பல கூடாரங்கள் தீக்கிரையாகின. 25ம் தேதி கும்பமேளாவுக்கு வந்திருந்த கார் தீப்பிடித்து எரிந்தது. அதன் அருகில் நின்றிருந்த மற்றொரு காரும் எரிந்தது. 29ம் தேதி மவுனி அமாவாசை அன்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் பலியாகினர்; 60 பேர் காயம் அடைந்தனர். இந்த சூழலில் இன்று மீண்டும் அங்க தீ விபத்து ஏற்பட்டது கும்பமேளா வரும் பக்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.