பட்னவிஸ் - அஜித் டில்லி பயணத்தால் பரபரப்பு Maharashtra Cabinet expansion | Maharashtra Politics|
மகாராஷ்டிர சட்டசபை தேர்தலில் பாஜ தலைமையிலான மகாயுதி கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. 5ம் தேதி மும்பையில் நடந்த விழாவில், பாஜவை சேர்ந்த தேவேந்திர பட்னவிஸ் முதல்வராக பதவியேற்றார். சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் ஆகியோர் துணை முதல்வராக பதவியேற்றனர். தொடர்ந்து மூன்று கட்சி தலைவர்கள் கலந்து பேசி கேபினட் விரிவாக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மகாராஷ்டிராவில் புதிய அரசு பொறுப்பேற்ற பின் முதல் முறையாக முதல்வர் பட்னவிஸ் டில்லி சென்று ஜனாதிபதி, துணை ஜனாதிபதியை சந்தித்து வாழ்த்து பெற்றார். பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நட்டா உள்ளிட்டோரையும் சந்தித்தார். அதே சமயம் துணை முதல்வர் அஜித் பவார் மற்றும் தேசியவாத கட்சியின் மூத்த தலைவர் பிரபுல் படேல் ஆகியோர் டில்லி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மகாராஷ்டிரா அமைச்சரவையில் இலாகா பிரிப்பதில் கூட்டணி கட்சிகளிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால், பட்னவிஸ் மற்றும் அஜித் அமைச்சரவை விரிவாக்கம் குறித்து பாஜ தலைவர்களுடன் பேச்சு நடத்தவே டில்லி சென்றதாக கூறப்படுகிறது.