மக்காச்சோளத்துக்கு செஸ் வரி ரத்து செய்தது தமிழக அரசு | Maize | Cess Tax
தமிழகத்தில் 40 விதமான வேளாண் விளை பொருட்களுக்கு 1 சதவீதம் செஸ் எனப்படும் சந்தை வரி விதிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசால் அறிவிப்பு செய்யப்பட்ட வேளாண் பொருட்களுக்கு அதன் விற்பனை மதிப்பில் 1 சதவீத செஸ் வரி விதிக்கப்படுகிறது. ஏற்கனவே ஈரோடு, திருப்பூர், கோவை, நாகை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் மக்காச்சோளத்துக்கு செஸ் வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. கடந்த டிசம்பர் 17ம் தேதி முதல் நாமக்கல், சேலம், கடலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், மதுரை, பெரம்பலூர், தேனி, திருச்சி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், ராமநாதபுரம், நெல்லை, அரியலூர், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கரூர், தென்காசி, தூத்துக்குடி, திருப்பத்தூர், திருவள்ளூர், விருதுநகர் ஆகிய 23 மாவட்டங்களில் மக்காச்சோளத்துக்கு 1 சதவீதம் செஸ் வசூலிக்க வேளாண் உற்பத்திப் பொருட்கள் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்காச்சோளத்துக்கு செஸ் வரியை ரத்து செய்ய வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர்.