மக்காச்சோள செஸ் வரி விதிப்பில் இத்தனை நடைமுறை சிக்கலா! | Maize farming | 1% cess tax | Farmers, Trad
தினம் ஒரு பாலியல் துன்புறுத்தல் சம்பவம், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு என எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் ஆளும் திமுக அரசுக்கு தலைவலியை கொடுத்து வருகிறது. இன்னொரு பக்கம் ஜாக்டோ ஜியோ போன்ற அரசு ஊழியர் அமைப்புகளின் அதிருப்தியும் அரசுக்கு எதிராக திரும்பி உள்ளது. இதெல்லாம் போதாதென்று தேன் கூட்டில் கல்லெறிந்த கதையாக இப்போது விவசாயிகளின் கடும் எதிர்ப்பையும் சம்பாதித்திருக்கிறது ஸ்டாலின் அரசு. ஏற்கனவே விவசாயிகள் போதிய விளைச்சல் இல்லை, விலை இல்லை என கடும் பாதிப்பில் இருக்க, மக்காச்சோளத்துக்கு 1 சதவீத செஸ் வரி விதித்திருப்பது விவசாயிகளை கடும் அதிருப்திக்கு ஆளாக்கி இருக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் அறிவிக்கப்பட்ட வேளாண் பொருட்களுக்கு அதன் விற்பனை மதிப்பில் ஒரு சதவீத சந்தை வரி எனும் செஸ் வரி விதிக்கப்படுகிறது. மொத்தம் 40 விதமான வேளாண் விளை பொருட்களுக்கு ஒரு சதவீத செஸ் வரி விதிக்கப்படுகிறது. ஈரோடு, திருப்பூர், கோவை, நாகை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் மக்காச்சோளத்துக்கு ஏற்கனவே செஸ் வசூலிக்கப்படுகிறது. டிசம்பர் 17 முதல் நாமக்கல், சேலம், கடலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், மதுரை, பெரம்பலூர், தேனி, திருச்சி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், ராமநாதபுரம், நெல்லை, அரியலூர், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கரூர், தென்காசி, தூத்துக்குடி, திருப்பத்தூர், திருவள்ளூர், விருதுநகர் மாவட்டங்களிலும் மக்காச்சோளத்துக்கு ஒரு சதவீத செஸ் வசூலிக்க, வேளாண் உற்பத்திப் பொருட்கள் துறை உத்தரவிட்டுள்ளது. இதில் பெரும்பாலான மாவட்டங்களில் மக்காச்சோள விவசாயிகள் பரிதாப நிலையில் உள்ளனர். இந்த வரிச்சுமையை வர்த்தகர்கள், விவசாயிகளுக்கு தர வேண்டிய பணத்தில் கழித்துக் கொள்வதால், கடும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. எனவே, மக்காச்சோளத்துக்கு விதித்துள்ள செஸ் வரியை ரத்து செய்ய வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.