மும்பையில் கந்து வட்டி ஆசாமியை கைது செய்து போலீஸ் விசாரணை! Man arrested for Sexual assault | Mumbai
மும்பையை சேர்ந்த 19 வயது இளைஞர் மற்றும் 17 சிறுவன், கவுதம் கோஸ்வாமி என்பவரிடம் வட்டிக்கு கடன் வாங்கினர். குறிப்பிட்ட நாட்களுக்குள் கடனை திரும்ப செலுத்தாததால், கோஸ்வாமியின் அடியாட்கள் தீரஜ், பரத், பஞ்சுபாய் ஆகியோர் கடன் வாங்கிய இருவரையும் கடத்தினர். சிறுவன் மற்றும் இளைஞரை காரில் ஏற்றி மும்பையில் இருந்து புனேவுக்கும், பின் அங்கிருந்து மீண்டும் மும்பைக்கும் என சாலை மார்க்கமாக காரில் மாற்றி மாற்றி அழைத்து சென்றனர். கார் பயணத்தின் போது, இருவரையும் பல முறை பலமாக தாக்கினர். பின் மும்பையில் உள்ள கோஸ்வாமியின் அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில், இருவரையும் அடைத்தனர். பணத்தை உடனே திரும்ப செலுத்தும் படி இருவரையும் பெல்டால் தாக்கினர். இருவரின் உடல் முழுதும் பலத்த காயங்கள் ஏற்பட்டன. வாங்கிய தொகை சிறிதளவே ஆயினும், வட்டியுடன் சேர்த்து கட்டமுடியாததால், கையில் பணம் சேர்ந்ததும் கடனை திருப்பி செலுத்துவதாகக் கூறி இருவரும் கதறி அழுதனர். அவர்களின் கதறலுக்கு காது கொடுக்காத கோஸ்வாமியின் ஆட்கள், சிறுவன் மற்றும் இளைஞரின் ஆடைகளை கழட்டி பாலியல் தொல்லை கொடுத்தனர். அதை மொபைல் போனில் வீடியோ எடுத்து, குறிப்பிட்ட காலத்துக்குள் கடனை திரும்ப செலுத்தாவிட்டால், சமூக வலைதளங்களில் பதிவேற்றிவிடுவதாக மிரட்டினர். அங்கிருந்து வெளியேறிய இருவரும், இது குறித்து போலீசில் புகார் அளித்தனர். இளைஞர் மற்றும் சிறுவனை போலீசார் ஆஸ்பிடலில் சேர்த்தனர். அவர்களுக்கு காயங்களுக்கு சிகிச்சை அளித்ததுடன் மனநல ஆலோசனை வழங்கவும் ஏற்பாடு செய்தனர். புகாரின் அடிப்படையில், கோஸ்வாமியை கைது செய்த போலீசார், அவர்களை கடத்தி சென்று பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய மூவரை தேடி வருகின்றனர்.