போட்டி போட்டு சாலை மறியல்; போலீசார் முன் அடிதடி ரகளை marxist communist bjp clash| | hindu munnani
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெருமுனை பிரசாரம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் சரத் பேசும்போது, மதுரையில் நடைபெறவுள்ள முருகன் மாநாட்டை இழிவுபடுத்தியும், உள்ளூர் பாஜ மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகளை ஒருமையில் பேசியதாகவும் கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்த இந்து முன்னணி நிர்வாகி வினோத் உள்ளிட்டோர் மார்க்சிஸ்ட் கட்சியினர் தரக்குறைவாக பேசுவதை கண்டித்துள்ளனர். இதனால், இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் முற்றி அடிதடி ரகளை ஏற்பட்டது. தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் இரு தரப்பினரும் புகார் அளிக்க சென்றனர். அங்கும் அவர்களுக்குள் வாக்குவாதம் கைகலப்பு ஏற்பட்டது. இதில், காயமடைந்த இந்து முன்னணி நிர்வாகி வினோத், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டார். அதே போல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகி சரத்தும் அதே மருத்துவமனையில் அட்மிட் ஆனார். அவர்களை பார்ப்பதற்காக மார்க்சிஸ்ட் கட்சியினரும், இந்து முன்னணி, பாஜவினர் மருத்துவமனைக்கு சென்றனர். மருத்துவமனைக்கு உள்ளேயும் தகராறு ஏற்பட்டு இருக்கிறது. போலீசார் அவர்களை வெளியேற்றினர். அப்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பெண்கள் உள்ளிட்டோர், திண்டுக்கல் அரசு மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுக்கு எதிராக மறுபக்கத்தில் இந்து அமைப்பினர், பாஜவினர் மறியல் செய்தனர். ஒருவரை ஒருவரை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். அப்போது, அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. போலீசார் தடுக்க முயன்றபோதும், ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி கொண்டனர்.