மசாஜ் சென்டர் பெயரில் நடக்கும் கூத்து: மக்கள் புகார் | Coimbatore | Massage Centre Coimbatore
கோவை சுற்றுவட்டார பகுதிகளில் பாலியல் தொழில் அதிகளவு நடக்கிறது என்கிற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. சர்வதேச புரோக்கர்களின் நெட்வொர்க்குடன் ஸ்டார் ஹோட்டல்கள், ஸ்பாக்களுக்கு இளம்பெண்கள் அழைத்து வரப்படுகின்றனர். உள்ளூர் தொடங்கி வெளி மாநில மற்றும் வெளி நாட்டு பெண்களை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபட வைக்கின்றனர். இதுதவிர, ரெஸ்டோ பார், பப்களிலும் பாலியல் குற்றங்கள் நடப்பதாக புகார் வருகிறது. ரெஸ்டோ பார்கள், பப்களில் பெண்களுக்கு இலவசமாக மது அளிக்கப்படுகிறது. இதனால், மது போதையில் இருக்கும் பெண்களிடம் பாலியல் அத்துமீறல்கள் நடக்கிறது. கோவையில் கடந்த சில மாதங்களாக பாப்பம்பட்டி, கண்ணம்பாளையம் பகுதிகளில் பெரிய அளவில் பாலியல் தொழில் நடக்கிறது என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அப்பகுதியை சுற்றி 9 மசாஜ் செண்டர்கள் இயங்கி வருகிறது. அங்கு பணியாற்றும் பெண்கள் ரோட்டில் நின்று அந்த வழியாக செல்லும் இளைஞர்களை அழைக்கின்றனர். கட்டாயப்படுத்தி மசாஜ் சென்டர் உள்ளே வர வைக்கின்றனர். கஞ்சா, போதை மாத்திரை உள்ளிட்ட போதை பொருட்களின் பயன்பாடும் அதிகரித்துள்ளது. இதுபோன்ற சமூக விரோத செயல்களை தடை செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோவை கலெக்டர் ஆபீஸில் புகார் மனு அளித்தனர். கோரிக்கை நிறைவேறவில்லை என்றால் மக்களை திரட்டி சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என எச்சரித்தனர்.