மெக்சிகோ கும்பலின் தொடர்பு: வெளியான பகீர் தகவல் | meth lab | NCB | Tihar Jail warden
உத்தர பிரதேச மாநிலம் காஸ்னா தொழிற்பேட்டை பகுதியில் போதை பொருள் தயாரிக்கும் ஆலை இயங்கி வருவதாக போதை பொருள் கட்டுப்பாடு வாரியத்துக்கு தகவல் கிடைத்தது. டில்லி போலீசின் சிறப்பு பிரிவினருடன் இணைந்து அதிகாரிகள் சமீபத்தில் சோதனை நடத்தினர். அங்குள்ள ஒரு தொழிற்சாலையில் ஆய்வகம் அமைத்து மெத் எனும் போதைப் பொருள் தயாரிப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆலையை நடத்தி வந்த தொழிலதிபர், டில்லி திஹார் சிறையின் ஜெயிலர் ஒருவர், மெக்சிகோவை சேர்ந்த நபர் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். 95 கிலோ எடையுள்ள மெத் எனும் செயற்கை போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. போதைப் பொருள் தயாரிக்க வைத்திருந்த ரசாயனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது என அதிகாரிகள் கூறினர். ரசாயன பொருட்களை கலந்து இது போன்ற போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதில் இருந்து வெளியேறும் கழிவுகள் மிகவும் ஆபத்தானவை. இந்த ஆலையை நடத்தி வந்த தொழிலதிபர் ஏற்கனவே போதைப் பொருள் வைத்திருந்த வழக்கில் கைதானவர். அப்போது திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அங்கிருந்த சிறை வார்டன் ஒருவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இதன் பின் இருவரும் நண்பர்களாக பழகினர். சிறையில் இருந்து வெளியே வந்ததும் வார்டனுடன் இணைந்து போதைப் பொருள் தயாரிப்பில் ஈடுபட்டார். இதற்காகவே மும்பையில் பயிற்சி பெற்ற ஒருவரை தங்களுடன் இவர்கள் சேர்த்துக் கொண்டனர். மேலும் சிலரும் இதில் இணைந்தனர். சோதனையின்போது, தொழிலதிபர், வார்டன் ஆகியோர் அந்த தொழிற்சாலையில் இருந்தனர்.