உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இந்திய ரயில்வேயுடன் இணைந்தது மிசோரம் தலைநகர் அய்ஸ்வால் Aizawl Rail Network| Mizoram gets 9,000 core

இந்திய ரயில்வேயுடன் இணைந்தது மிசோரம் தலைநகர் அய்ஸ்வால் Aizawl Rail Network| Mizoram gets 9,000 core

நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரமில் இன்று, ரயில்வே, சாலை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடுகள் தொடர்பான, 9,000 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். மிசோரமின் லெங்புய் ஏர்போர்ட் சென்ற பிரதமர் மோடி, கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக விழா மேடைக்கு நேரில் செல்ல முடியவில்லை. இதையடுத்து, வீடியோ கான்பரன்ஸ் முறையில் ஏர்போர்ட்டில் இருந்த படியே நலத்திட்டங்களை திட்டங்களை துவக்கி வைத்தார். 8000 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் உருவான பைராபி - சாய்ராங் ரயில்வே திட்டம் இன்று துவங்கியது. இதன் மூலம் மிசோரம் தலைநகர் அய்ஸ்வால் முதல் முறையாக நாட்டின் ரயில்வே நெட்வொர்க்குடன் இணைந்துள்ளது. மொத்தம் 143 பாலங்கள் அவற்றில் 55 பெரிய பாலங்கள், 45 சுரங்கப் பாதைகள் என மிகவும் சிக்கலான வழித்தடங்களில், சவாலான முறையில் உருவாகியுள்ள இந்த ரயில்வே திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். சாய்ராங் - டில்லி எக்ஸ்பிரஸ், சாய்ராய் - கவுகாத்தி எக்ஸ்பிரஸ், சாய்ராங் - கோல்கட்டா எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களையும் பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மிசோரம் கவர்னர் வி.கே.சிங், முதல்வர் லால்துஹோமா, மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோர் நேரடியாக பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: மிசோரம் மக்களுக்கு வணக்கம். மோசமான வானிலையால் தங்களை நேரில் சந்திக்க முடியாதமைக்கு வருந்துகிறேன். எனினும், இங்கிருந்தபடியே மிசோரம் மக்களுக்கான திட்டங்களை துவங்கி வைப்பதில் மகிழ்ச்சி. சுதந்திர போராட்டம், தேச கட்டமைப்பில் மிசோரம் மக்கள் என்றும் கை கொடுத்துள்ளனர். நாட்டின் வளர்ச்சியில் மிசோரம் மக்களின் பங்களிப்பு அளப்பரியது. நாட்டின் ரயில்வே நெர்வொர்க்குடன் அய்ஸ்வால் இணையும் வரலாற்று சிறப்பு மிக்க நாள் இது. பைராபி - சாய்ராங் ரயில்வே திட்டம் மிகப் பெரிய சவால்களுக்கு பின் சாத்தியமாகியுள்ளது. மிசோரமின் சாய்ராங் முதல் முறையாக ராஜ்தானி ரயில் மூலம் டில்லியுடனான இணைப்பை பெற்றுள்ளது. இது வெறும் ரயில்வே பாதை இணைப்பு மட்டுமல்ல. மிசோரம் மக்களை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைப்பதுடன், மாநிலத்தின் சுற்றுலா, தொழில், மருத்துவ கட்டமைப்பை வளர்ச்சி அடையச் செய்யும். முந்தைய ஆட்சியாளர்கள் மிசோரம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியில் அக்கறை காட்டவில்லை. இப்பகுதிகளை புறக்கணித்தனர். ஆனால், கடந்த 11 ஆண்டுகளாக வடகிழக்கின் வளர்ச்சியில் மத்திய அரசு மிகுந்த அக்கறை செலுத்தி வருகிறது. வடகிழக்கின் பல பகுதிகள் ரயில்வே சேவையை பெற்றுள்ளன. குடிநீர் இணைப்பு, சமையல் எரிவாயு இணைப்பு இங்குள்ள மக்களுக்கு கிடைத்ததில், மத்திய அரசின் செயல்பாடு முக்கியத்துவம் வாய்ந்தது. நாட்டின் வட கிழக்கு மாநிலங்கள் முக்கிய தொழில் முனையமாகவும், தொழில் வளர்ச்சியின் முக்கிய நுழைவு வாயிலாகவும் அமைந்துள்ளது. ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் முக்கிய மையமாக வடகிழக்கு மாநிலங்கள் திகழ்கின்றன. இங்கு, 4,500 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் செயல்படுவது மகிழ்ச்சி. உலக அரங்கில் 4 வது பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா உருவானதில் வடகிழக்கின் பங்களிப்பும் உள்ளது. இங்குள்ள விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க கேலோ இந்தியா திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் விளையாட்டுத்துறையில் இளைஞர்கள் சாதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன் டில்லியில் நடந்த அஷ்ட லட்சுமி திருவிழாவில் பங்கேற்றேன். வட கிழக்கு மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சிக்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன. முதலீடுகளை ஈர்க்கவும், தொழில்துறையை வளர்க்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 2014க்கு முன் வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சி மிகவும் பின் தங்கியிருந்தது. மத்திய அரசு மேற்கொண்டுள்ள ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால் தொழில், வர்த்தகம் சிறப்படையும். 22ம் தேதிக்கு பின் சிமென்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை பெருமளவு குறையும். பண்டிகை காலம் துவங்க உள்ளது. உள்நாட்டு பொருட்கள் உற்பத்தி, விற்பனையை ஊக்குவிப்போம். இந்திய ரயில்வே வரைபடத்தில் ஐஸ்வால் இடம் பெற்றதற்காக மீண்டும் ஒருமுறை வாழ்த்து தெரிவிக்கிறேன். இங்குள்ள மக்களை வரவேற்கிறேன் என பிரதமர் மோடி பேசினார். #Aizawl| #MizoramNews| #AizawlRailConnect| #MosiatMizoram| #Bairabi_Sairang_Rail|

செப் 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை