உளவியல் சங்கம் சொல்வது என்ன? பெருகும் ஆதரவு | MK Stalin | tnpsya | Psychology Association
தமிழக பள்ளிகளில் நடக்கும் பாலியல் வன்கொடுமை குறித்து தமிழக உளவியல் சங்கம் சார்பில் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சமீபத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், குறிப்பாக பதினெட்டு வயதுக்குட்பட்ட பெண்கள், ஆசிரியர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவது அதிகரித்துள்ளது. இதன் விளைவாக ஆசிரியர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகின்றனர். இந்த சம்பவங்கள் மாணவர்களின் எதிர்காலத்தை அச்சுறுத்துவதோடு மட்டுமல்லாமல், பெற்றோர்களிடையே அச்ச உணர்வை உண்டாக்குகிறது. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவே தயக்கம் காட்டுகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்களை தண்டிப்பது அவசியம் என்றாலும், அது பிரச்சினைக்கு முழு தீர்வாக அமையாது. நெருக்கடி காலங்களில் மாணவர்கள் தங்களை பாதுகாத்து கொள்ள அத்தியாவசிய வாழ்க்கை திறன் பயிற்சி மற்றும் உளவியல் கல்வி அவர்களுக்கு வேண்டும். துன்புறுத்தலை அனுபவிக்கும் மாணவ, மாணவிகள் பெரும்பாலும் தங்கள் ஆசிரியர்கள் அல்லது பெற்றோரிடம் நடந்த அநீதிகளை சொல்ல தயங்குகின்றனர். இதுபோன்ற சூழ்நிலைகளில் பள்ளியில் உளவியலாளர்கள் அல்லது மனநல ஆலோசகர்கள் இருக்க வேண்டியது அவசியம்.