மோடியை அழைத்த குவைத் மன்னர்: காத்திருக்கும் ராஜ மரியாதை | Modi | Modi Kuwait
குவைத் நாட்டின் மன்னர் அஹமது அல் ஜபர் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி இரு நாள் பயணமாக வரும் 21ம் தேதி குவைத் செல்கிறார். அங்கு மன்னர் அஹமது அல் ஜபர், குவைத் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா அலி, பட்டத்து இளவரசர் உட்பட முக்கிய தலைவர்களை மோடி சந்தித்து பேச உள்ளார். குவைத் வாழ் இந்தியர்களையும் சந்திக்கிறார். பிரதமர் மோடியின் இந்த பயணத்தின் மூலம் இந்தியா- குவைத் இடையேயான நட்புறவு மேலும் வலுப்பெறும் என வெளியுறவு அமைச்சகம் கூறியது. கடந்த 43 ஆண்டுகளில் இந்திய பிரதமர் குவைத் செல்வது இதுவே முதல் முறையாகும். கடைசியாக 1981ல் அப்போதைய பிரதமர் இந்திரா குவைத் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். குவைத் நாடு இந்தியாவிற்கு கச்சா எண்ணெய், எல்பிஜி ஏற்றுமதியில் முக்கிய பங்காற்றி வருகிறது. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் குவைத்தில் பணியாற்றி வருகின்றனர். மோடியின் குவைத் பயணத்தின் போது கச்சா எண்ணெய், பார்மா, தொழில்நுட்பம், கல்வி தொடர்பாக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே டிசம்பர் இறுதியில் பிரதமர் மோடி சவுதி அரேபியா செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. குவைத் பயணத்தை தொடர்ந்து அரேபியா பயணம் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.