பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுடன் நிற்கும் சிங்கப்பூர்: மோடி நன்றி pm modi| singapore pm| lawra
சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங், 3 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். சிங்கப்பூர்- இந்தியா உறவை வலுப்படுத்துவது பற்றி இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இரு நாடுகளுக்கு இடையே பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பின்னர், பிரதமர் மோடி, சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். பிரதமர் மோடி உரையாற்றும்போது, பதவியேற்ற பின் முதல் முறையாக இந்தியாவுக்கு வந்துள்ள சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வேங்கை வரவேற்கிறேன் எனக்கூறினார். இரு நாடுகள் இடையேயான ராஜாங்க உறவின் 60வது ஆண்டு நிறைவடைந்த நிலையில், சிங்கப்பூர் பிரதமரின் வருகை மிக முக்கியமானது. தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளி சிங்கப்பூர். இந்தியாவில் சிங்கப்பூர் கணிசமான முதலீடுகளை செய்துள்ளது. சிங்கப்பூர் உடனான உறவு வலுவடைந்து வருகிறது. நமது கூட்டாண்மையின் எதிர்காலத்திற்கு விரிவான திட்டங்கள் வகுத்துள்ளோம். நமது ஒத்துழைப்பு பாரம்பரிய ஒப்பந்தங்களுடன் நின்றுவிடாமல், மாறிவரும் காலத்தின் தேவைக்கு ஏற்ப, மேம்பட்ட உற்பத்தி, பசுமை கப்பல் போக்குவரத்து, திறன் மேம்பாடு, சிவில் அணுசக்தி, நகர்புற நீர்மேலாண்மை ஆகியவையும் நமது ஒத்துழைப்பின் முக்கிய அம்சங்களாக இருக்கும். இந்தியா-சிங்கப்பூர் இடையேயான பிணைப்பை வலுப்படுத்துவதில் நமது மாநிலங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. சென்னையில் தேசிய திறன் மேம்பாட்டு மையம் நிறுவுவதில் சிங்கப்பூர் இணைந்து செயல்படும். மேம்பட்ட உற்பத்தி துறையில் திறமையான பணியாளர்களை உருவாக்குவதில் இந்த மையம் கவனம் செலுத்தும். டெக்னாலஜியும், புதுமையும் இந்தியா-சிங்கப்பூர் கூட்டாண்மையின் வலுவான தூண்கள். ஏ.ஐ., குவாண்டம் மற்றும் பிற டிஜிட்டல் டெக்னாலஜிகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த ஒப்புக்கொண்டுள்ளோம். விண்வெளித்துறையில் இன்று கையெழுத்தான ஒப்பந்தம், விண்வெளி அறிவியல் துறையில் முக்கிய அத்தியாயம். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மையை முன்னெடுத்து செல்வோம் என மோடி கூறினார். பயங்கரவாதத்துக்கு எதிராக ஒருங்கிணைந்து போராடுவது அனைத்து நாடுகளின் மனிதாபிமான கடமை என நாங்கள் நம்புகிறோம். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பின், இந்திய மக்களுக்கு அனுதாபம் தெரிவித்ததற்கும், பயங்கரவாதத்துக்கு எதிரான எங்கள் போராட்டத்தில் உறுதியான ஆதரவு அளிப்பதற்கும் பிரதமர் வோங் மற்றும் சிங்கப்பூர் அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்தியா- சிங்கப்பூர் உறவு ராஜதந்திரத்துக்கு அப்பாற்பட்டது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ், வோங் பேசும்போது, கடந்த பத்தாண்டுகளில் பிரதமர் மோடி தலைமையில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை கண்டுள்ளது என்றார். இந்தியாவின் மிகப்பெரிய வெளிநாட்டு முதலீட்டாளராக சிங்கப்பூர் உள்ளது. இந்தியாவின் அந்நிய நேரடி முதலீட்டில் அது கால் பங்கை கொண்டுள்ளது. இரு நாடுகளின் ஒத்துழைப்பு தற்போது பரந்த மற்றும் மாறுபட்ட துறைகளிலும் பரவி உள்ளது. இரு தரப்பு உறவுகள் வளர்ச்சி அடைந்து வருகிறது என்று கூறினார். #IndiaSingaporeRelations #PMModi #Diplomacy #SingaporePM #LawrenceWong #InternationalRelations #StrategicPartnership #SingaporeIndiaBilateralTrade #InnovationCollaboration #Friendship #TradeAgreement #ASEAN