நீர் நிலைகளை போற்றும் சிந்தனை ஊட்டிய கும்பமேளா Modi Speech about Maha Kumbh mela at Lok Sabha| Modi
உத்தர பிரதேசம் பிரயாக்ராஜில் நடந்த மகா கும்பமேளா பற்றி லோக்சபாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். உலகின் பிரமாண்ட ஆன்மிக திருவிழாவான கும்பமேளாவை வெற்றி அடைய செய்த பக்தர்கள், பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். கங்கையை பூமிக்கு கொண்டு வர பகீரதன் பெரு முயற்சி எடுத்தார். இந்த மகா கும்பமேளாவை நடத்தியதிலும் அப்படிப்பட்ட பெரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. நம் நாட்டின் மாபெரும் கலாசாரத்தை இந்த உலகம் அறிந்து கொண்டுள்ளது. கும்பமேளாவில் நம் தேசிய சிந்தனை வெளிப்பட்டுள்ளது. புதிய உறுதி மொழியை நோக்கிய பயணத்தை வெளிப்படுத்தியுள்ளது. பலருக்கு ஏற்பட்ட சந்தேகம், ஐயப்பாடுகளுக்கும் இந்த மாபெரும் திருவிழா விடை அளித்துள்ளது. ராமஜென்ம பூமியில் ராமர் கோயில் திறக்கப்பட்ட போது அடுத்த 1000 ஆண்டுகளுக்காக நாடு எப்படி தயாராகி வருகிறது என்பது வெளிச்சமானது. சரியாக அடுத்த ஓராண்டுக்கு பின் மகா கும்பமேளா நடந்துள்ளது. இதில் நாட்டு மக்களின் சமூக பொறுப்புணர்வு வெளிப்பட்டுள்ளது. இது, எதிர்கால சந்ததிக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. இதற்கு முன் இதே போல் நடந்த பல நிகழ்வுகள் நம்மை வழிநடத்தின. விழிப்புணர்வை ஏற்படுத்தின. நம் நாட்டில் பக்தியை நிலைநாட்ட கடந்த காலங்களில் நடந்த பக்தி இயக்க போராட்டங்களால், ஆன்மிக சிந்தனை வளர்ந்தது. சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் ஆற்றிய உரை இந்தியாவின் ஆன்மிக சிறப்பை உலகிற்கு வெச்சமிட்டு காட்டியது. பகத் சிங், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், காந்தி போன்றவர்களின் பெரு முயற்சியால் நாட்டு மக்கள் மத்தியில் சுதந்திரம் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டது. இதன் மூலம் நாடு சுதந்திரம் அடைந்தது. பிரயாக்ராஜில் நடந்த கும்பமேளாவும் இப்படிப்பட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. கோடிக்கணக்கான மக்கள் ஆன்மிகத்தை அனுபவித்தனர். நான் திரிவேணி சங்கமத்தில் இருந்து கங்கை நீரை மொரீஷியசுக்கு எடுத்து சென்றேன். அங்குள்ள மக்கள் ஆன்மிகத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கை பார்க்கவே மெய் சிலிர்க்க வைத்தது. நம் பாரம்பரியம், ஆன்மிகம், கலாசாரத்துடன் இளைஞர்கள் இணைந்ததை காண முடிந்தது. கும்பமேளாவில் எத்தனையோ அமுதங்கள் கிடைத்தன. அதில் ஒற்றுமை எனும் அமுதம் மிகப் பெரிய பிரசாதம். நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து வந்தவர்கள் கும்பமேளாவில் ஒன்றாகினர்.