பழங்கால கையெழுத்து பிரதிகளை டிஜிட்டல் மயமாக்கும் ஞான பாரதம்: மோடி பெருமிதம் Modi Speech at Gyan
நம் நாட்டின் பண்டைய நாகரிகம், கலாசாரம், பண்பாட்டை மீட்டெடுத்து பாரம்பரியத்தை போற்றும் வகையில், ஞான பாரதம் எனும் போர்ட்டால் துவக்க நிகழ்ச்சி டில்லியில் நடந்தது. ஓலைச்சுவடிகள் மற்றும் பல்வேறு வகையிலான கையெழுத்து பிரதிகளை டிஜிட்டல் வடிவில் பதிவேற்றி, அவற்றை பாதுகாக்கும் நடவடிக்கையாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மத்திய கலாசார அமைச்சகம் சார்பில், டில்லி விஞ்ஞான் பவனில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். ஞான பாரதம் இணையதளத்தை துவங்கி வைத்த பிரதமர் மோடி, அங்கு இடம் பெற்ற கண்காட்சியை பார்வையிட்டார். தொடர்ந்து அங்கு நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: கையெழுத்துப் பிரதிகளை பாதுகாத்து, இந்தியாவின் அறிவுசார் மரபை மீட்டெடுக்கும் முயற்சியாக ஞான பாரதம் போர்ட்டால் துவங்கப்பட்டுள்ளது. பண்டைய கையெழுத்துப் பிரதிகளை டிஜிட்டல் மயமாக்குவதின் மூலம், நம் பாரம்பரியத்தை பாதுகாக்க முடியும். மேலும் இந்த சர்வதேச மாநாட்டின் மூலம், இந்தியாவின் கையெழுத்து பிரதிகளுக்கு புத்துயிர் ஊட்டுவதற்கான வழிமுறைகள் குறித்து அறிஞர்கள் ஆலோசிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த செயற்கரிய முயற்சிக்காக நாட்டு மக்கள் மற்றும் கலாசார அமைச்சகத்திற்கு வாழ்த்து தெரிவிக்கிறேன். நாம் இன்று எழுத்துக்களை எளிதாக எழுத முடிகிறது. அதற்கான தொழில்நுட்பம் நம்மிடம் உள்ளது. கீ போர்டு உதவியுடன் நொடிப்பொழுதில் பல எழுத்துக்களை தட்டச்சு செய்து, அதை பிரின்ட் எடுக்க முடிகிறது. ஆனால், நுாற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டதை யோசித்துப் பாருங்கள். ஒவ்வொரு எழுத்து எழுதுவதற்கும் மிகப் பெரிய முயற்சி மேற்கொள்ள வேண்டியிருந்தது. அதீத கவனம் செலுத்த வேண்டியிருந்தது. ஆனால் அந்த காலகட்டத்தில் கூட, இந்தியர்கள் மிகப் பெரிய நுாலங்களை அமைத்திருந்தனர். அந்த வகையில், ஓலைச் சுவடி, தாமிர பட்டயம், செப்பு பட்டயம் என 1 கோடி கையெழுத்து பிரதிகள் நம்மிடம் உள்ளன. பண்டைய காலத்தில் ஓலைகள், தாமிர பட்டையங்கள் போன்றவை எழுதுவதற்கு பயன்படுத்தப்பட்டன. பாரதத்தின் ஞான பரம்பரை இவ்வாறாக ஒரு தலைமுறையில் இருந்து இன்னொரு தலைமுறைக்கு கடத்தப்பட்டது. வேதங்கள், ஆயுர்வேத மருத்துவம், ஜோதிடக்கலை போன்றவை நம் பாரம்பரியத்தில் அரிய பொக்கிஷங்களாக திகழ்கின்றன. கணிதம் முதல் கணிணி அறிவியல் வரை, பூஜ்ஜியத்தை ஆதாரமாகக் கொண்டுள்ளது. அது இந்தியாவின் கொடையாக திகழ்கிறது. பழங்கால அறிவு புதையலில் நுழைவு வாயிலாக ஞான பாரதம் திகழ்கிறது என பிரதமர் மோடி பேசினார். #ModiSpeech| #GyanBharatam| #GyanBharatamPortal| #InternationlaConferenceon| #VigyanBhavan| #PMModi| #DigitalizationofManuscripts|