மோடி வெற்றி ரகசியம்: உடைத்து பேசிய அமித் ஷா Amit shah | PM Modi | Politics |
பாஜவை வலுப்படுத்தியதில் பிரதமர் மோடியின் பங்களிப்பு, நாட்டுக்கு மோடி செய்த பணிகள் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பேட்டி யளித்தார். அவர் கூறியதாவது- பிரதமர் மோடியை முதன்முதலில் ராஷ்ட்ரீய சுயம்சேவக் சங்க கூட்டத்தில்தான் பார்த்தேன். சங்க கூட்டத்தில் ஏன்? பங்கேற்க வேண்டும் என்பதை அவர் எங்களுக்கு விளக்கினார். பிரதமர் மோடி எதையும் முழு மனதுடன் ஈடுபாட்டுடன் செய்பவர். அவரது செயல்கள் அனைத்தும் இறுதி இலக்கை நோக்கியதாகத்தான் இருக்கும். அதனால்தான் அவர் இவ்வளவு சிறப்பான வெற்றிகளை அடைகிறார். மக்களுடன் இணைந்திருப்பதன்மூலம் அவர் இறுதி இலக்கை அடைவதற்கான வழியை கண்டுபிடிக்கிறார். இந்த பண்பு என்னை போன்றவர்களிடம் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. பிரதமர் மோடியின் இந்த அணுகுமுறைக்கான பல உதாரணங்களை அவருடைய வாழ்விலும் நான் பார்த்தேன். அந்த பண்புகள்தான் இன்று உலகமே அறியும் நரேந்திர மோடியை உருவாக்கியிருக்கிறது. குஜராத்தில் பாரதிய ஜனதா மூன்றாவது இடத்தில்தான் இருந்தது. காங்கிரஸ் முதல் இடத்திலும் ஜனதா 2வது இடத்திலும் இருந்தது. அப்போது எங்களிடம் 11 எம்.எல்.ஏ.க்கள்தான் இருந்தனர். அதில் இருந்து எழுந்து வலிமை மிக்க கட்சியை உருவாக்குவது கடினமான பணியாகத்தான் இருந்தது. குஜராத்தை காங்கிரஸ் ஆண்டபோது தொடர்ந்து 3 ஆண்டுகள் வறட்சி நிலவியது. அப்போது மோடி, உள்ளூர் பாஜ தலைவர்களை கிராமங்களில் நீதி யாத்திரை நடத்தும்படி கூறினார். காங்கிரஸ் அரசின் அலட்சியப்போக்கை வெளிப்படுத்துவதும் வறட்சி நிவாரணத்தில் நடந்த ஊழல்ளை வெளிக்கொண்டு வருவதும்தான் எங்கள் நோக்கமாக இருந்தது.