மணிப்பூருக்கு ஆயுத சப்ளை: தடுக்க போலீஸ்-ராணுவம் அதிரடி More than 300 guns recovered in Manipur
நாட்டின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக அவ்வப்போது கலவரம் வெடித்தபடி உள்ளது. மெய்தி, கூகி இன மக்களிடையே ஏற்பட்ட மோதல் போக்கால், அங்கு தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது. கடந்த வாரம் குறிப்பிட்ட பிரிவை சேர்ந்த தலைவர் ஒருவரை சிபிஐ கைது செய்ததை தொடர்ந்து மீண்டும் கலவரம் வெடித்தது. பல இடங்களில் வீடுகள், கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, பிஷ்ணுபூர், காக்சிங், தொவ்பால் ஆகிய மாவட்டங்களில் கலவரம் பெரிய அளவில் வெடித்தது. இதையடுத்து, 5 மாவட்டங்களிலும் உடனடியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இன்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டு, கலவரக்காரர்களை ஒடுக்கும் பணியில் போலீஸ் - துணை ராணுவத்தினர் ஈடுபட்டனர். ஏற்கனவே மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ள நிலையில், மேற்கண்ட 5 மாவட்டங்களிலும் மாநில போலீஸ் மற்றும் துணை ராணுவப்படையினர் வீடு வீடாக சல்லடை போட்டு சோதனை மேற்கொண்டனர்.