அவாமி லீக் தலைவர்கள் வீடுகளை துவம்சம் செய்த கும்பல் Mujibur Rahman Home Demolition| Bangladesh|Sheik
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற மாணவர் போராட்டம் வன்முறையாக மாறியதால், பிரதமராக இருந்த அவாமி லீக் கட்சி தலைவர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவுக்கு வந்தார். அவாமி லீக் மாணவர் அமைப்பு ஏற்பாடு செய்த ஆன்லைன் நிகழ்ச்சியில் நேற்றிரவு ஷேக் ஹசீனா இந்தியாவில் இருந்தபடி உரையாற்ற இருந்தார். இந்த நிகழ்ச்சி தொடங்குவதற்கு சற்று முன்னதாக, வங்கதேசத்தின் தந்தை என்று புகழப்படும், ஹசீனாவின் தந்தை முஜிபுர் ரஹ்மானின் வீட்டுக்குள் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் புகுந்து சூறையாடினர். அங்கிருந்த முஜிபுரின் போட்டோக்கள் உட்பட அனைத்து பொருட்களை அடித்து நொறுக்கினர். வீட்டுக்கு தீ வைத்து எரித்தனர். கிரேன், புல்டோசர் மூலம் வீட்டின் ஒரு பகுதியை இடித்தனர். பாசிசத்தின் அடையாளமாக இருப்பதால் முஜிபுர் ரஹ்மானின் வீட்டை இடித்து கொளுத்தியதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். இது, ஷேக் ஹசீனா அரசின் கட்டுப்பாட்டில் இருந்த வீடு, அதை காப்பாற்ற வேண்டிய அவசியமில்லை எனக்கூறினார். முஜிபுர் ரஹ்மான் வீடு இடிக்கப்பட்ட அதே நேரத்தில், ஷேக் ஹசீனாவின் உறவினர்கள், அவாமி லீக் கட்சி தலைவர்களின் வீடுகளையும் கும்பல் தாக்கியது. சிட்டாங், ஜமால் கான் பகுதிகளில் இருந்த முஜிபுர் ரஹ்மானின் சிலைகள் சேதப்படுத்தப்பட்டன. இந்த தாக்குதல் சம்பவங்களுக்கு ஷேக் ஹசீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கட்டடங்களை இடிக்கலாம் ஆனால், வரலாற்றை சேதப்படுத்த முடியாது. நாட்டின் சுதந்திரத்தை புல்டோசர்களை கொண்டு முடிவுக்கு கொண்டுவர முடியாது என ஹசீனா கூறியுள்ளார்.