முட்புதரில் இளைஞர் சடலம்: 20 இடத்தில் வெட்டுகாயம் | Murder | Youngster | Chennai
கஞ்சா போதையில் அடிதடி இளைஞரை சாய்த்த கும்பல் முட்புதரில் சடலம் வீச்சு திருவள்ளூரில் பரபரப்பு திருவள்ளூர் மாவட்டம், நார்த்தவாடா பகுதியில் உள்ள முட்புதரில் இன்று காலை உடல் முழுவதும் சரமாரியாக வெட்டப்பட்ட நிலையில் இனைஞர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். கிராம மக்கள் கொடுத்த தகவலின் பேரில் திருவாலங்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தலை, கை, கால் உட்பட உடல் முழுவதும் 20க்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டு விழுந்திருந்தது. சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து போலீசார் விசாரி்த்தனர். சட்டை பாக்கெட்டில் ஆதார் கார்டு இருந்தது. அதன்மூலம் அந்த இளைஞர் திருவள்ளூர் அருகே பூண்டி கிராமத்தைச் சேர்ந்த லோகேஷ் வயது 19 என தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு எஸ்பி சீனிவாச பெருமாள், திருத்தணி டிஎஸ்பி கந்தன் ஆகியோர் சென்று விசாரித்தனர். இந்த வழக்கில் துப்புதுலக்க 2 தனிப்படை அமைக்க உத்தரவிட்டனர் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட வாலிபர் லோகேஷ் நார்த்தவாடாவில் உள்ள அவரது பாட்டி வீட்டுக்கு வந்தது தெரிந்தது. லோகேஷுக்கு கஞ்சா பழக்கம் இருந்துள்ளது. நண்பர்களுடன் சேர்ந்து கஞ்சா பயன்படுத்துவது வழக்கம். அதேபோல, நேற்றும் அவர் நண்பர்களுடன் சேர்ந்து கஞ்சா அடித்து இருக்கலாம்; போதையில் ஏற்பட்ட மோதலில் நண்பர்களே கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.