மியான்மர் பூகம்பத்தில் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை | Myanmar earth quake | Death toll | Rescue underw
தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் சகாயிங் நகரின் வடமேற்கே, நேற்று முன்தினம், 7.7 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்த 12 நிமிடங்களில், 6.4 என்ற ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் தாக்கம், மியான்மரின் அண்டை நாடான தாய்லாந்தின் பாங்காக்கிலும் உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் மியான்மர் தலைநகர் நய்பிடாவ், மண்டாலே உள்ளிட்ட நகரங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. வானுயர்ந்த கட்டடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், வீடுகள் தரைமட்டமாகின. இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 2,000 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 2,376 பேர் காயமடைந்து உள்ளதாகவும், 30 பேர் காணாமல் போயுள்ளதாகவும் மியான்மரில் ஆளும் ராணுவம் தெரிவித்து உள்ளது. தலைநகர் நய்பிடாவ், மண்டாலே உள்ளிட்ட நகரங்களில் மின்சாரம், தொலைபேசி மற்றும் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட பகுதிகளில், மீட்புப் படையினர் முழு வீச்சில் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் தாய்லாந்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 26 பேர் காயமடைந்து உள்ளதாகவும், 47 பேரை காணவில்லை என்றும் பாங்காக் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. தாய்லாந்தில் உயிர்சேதத்தை விட, பொருட்சேதம் தான் அதிகம் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.