நேஷனல் ஹெரால்டு மோசடி வழக்கு: ராகுலுக்கு சிக்கல் Rahul |Sonia |national herald case |Hearing |
1937-ல் சுதந்திர போராட்ட வீரர்கள் சுமார் 5,000 பேரிடம் நிதி பெற்று அவர்களை பங்குதாரர்களாக சேர்த்து Asociated Journals Limited (AJL) என்ற நிறுவனத்தை ஜவஹர்லால் நேரு தொடங்கினார். அப்போது அதன் முதலீடு 5 லட்சம் ரூபாய். இந்த நிறுவனம் ஆங்கிலத்தில் நேஷனல் ஹெரால்டு, இந்தியில் நவஜீவன், உருது மொழியில் குவாமி ஆவாஸ் நாளிதழ்களை 2008 வரை வெளியிட்டது. அதன்பின் நஷ்டத்தை சந்தித்து முடங்கியது. இருப்பினும் ஏஜெஎல் நிறுவனத்துக்கு டில்லி, லக்னோ, போபால், மும்பை, இந்தூர், பாட்னாவில் 5000 கோடி ரூபாய் மதிப்பில் சொத்துக்கள் இருந்தன. நேஷனல் ஹெரால்டு உள்ளிட்ட நாளிதழ்களை மீண்டும் தொடங்க காங்கிரஸ் கட்சியிடம் ஏஜெஎல் நிறுவனம் 90 கோடி ரூபாய் வட்டியில்லா கடனாக பெற்றது. ஆனால் அந்த பணத்தை திருப்பி செலுத்தவில்லை. 2010-ல் ராகுலை இயக்குனராக கொண்டு யங் இந்தியன் என்ற நிறுவனம் 5 லட்சம் ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்டது. இதில் சோனியாவும் இயக்குநராக சேர்க்கப்பட்டார். இவர்கள் இருவருக்கும் இந்த நிறுவனத்தில் 76 சதவீத பங்குகள் உள்ளன. இந்நிலையில் ஏஜெஎல் நிறுவனம் காங்கிரசிடம் பெற்ற 90 கோடி ரூபாய் கடனையும் அந்நிறுவனத்தின் பங்குகளையும் யங் இண்டியன் நிறுவனத்துக்கு மாற்ற ஒப்புதல் அளித்தது. 2011-ல் அதற்கான வேலைகள் நடந்து முடிந்தன. ஏஜெஎல் நிறுவன பங்குகள் யங் இந்தியன் நிறுவனத்துக்கு மாற்றப்படுவது தொடர்பாக தங்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என அதன் பங்குதாரர்கள் சிலர் குற்றம்சாட்டினர். 5,000 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துக்கள் மற்றும் பங்குகளை கொண்டுள்ள ஏஜெஎல் பொது நிறுவனத்தை, 5 லட்ச ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட யங் இந்தியன் என்ற நிறுவனத்துக்கு முறைகேடாக மாற்றி உள்ளனர். இதில் சோனியா, ராகுல் நிதி முறைகேடு செய்துள்ளனர் என பாஜ மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி டில்லி ஐகோர்ட்டில் 2013ல் வழக்கு தொடர்ந்தார். இது குறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்த உத்தரவிட அவர் கோரினார். கோர்ட் உத்தரவுப்படி நிதி மோசடி நடைபெற்றதா என்பது குறித்து அமலாக்கத்துறை 2014-ல் விசாரணையை தொடங்கியது. விசாரணைக்கு பிறகு 2021ல் சோனியா, ராகுல் உள்ளிட்டோர் மீது அமலாக்க துறை வழக்கு பதிவு செய்தது. 2023ல் 751.9 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. கடந்த ஏப்ரல் 9ம் தேதி இந்த வழக்கில் டில்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்க துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, லோக் சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், காங்கிரஸ் வெளிநாடு பிரிவு தலைவர் சாம் பிட்ரோடா உள்பட 7 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது.