தேஜகூ தலைவர்களுடன் சி.பி.ராதாகிருஷ்ணன் சந்திப்பு NDA vice-presidential nominee CP Radhakrishnan
ஜகதீப் தன்கர் கடந்த மாதம் 21ம்தேதி திடீரென ராஜினாமா செய்தார். இதனால் அடுத்த துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் செப்டம்பர் 9ம் தேதி நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் 21ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக மஹாராஷ்டிரா கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். திருப்பூரில் பிறந்த சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகள் முழு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், இண்டி கூட்டணியைச் சேர்ந்த தலைவர்களும் அவருக்கு ஆதரவாக கருத்து கூறி வருகின்றனர். அதே நேரத்தில் கூட்டணி எடுக்கும் முடிவே இறுதியானது என மழுப்பலாக பேசி வருகின்றனர். லோக்சபா, ராஜ்ய சபா இரண்டிலும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மெஜாரிட்டி உள்ள நிலையில், துணை ஜனாதிபதி தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது. ஆனாலும் துணை ஜனாதிபதியை போட்டியின்றி தேர்வு செய்வதற்காக, எதிர்கட்சி தலைவர்களுடன் மூத்த மத்திய அமைச்சர்கள் பேசி வருகின்றனர். அந்த வகையில் முதல்வர் ஸ்டாலினிடம் ஆதரவு கேட்டு போனில் மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், டில்லிக்கு வந்த சி.பி. ராதாகிருஷ்ணன் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார். அதைத் தொடர்ந்து, டில்லியில் உள்ள மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி இல்லத்தில் ஜனநாயக கட்சி தலைவர்கள் கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் பங்கேற்ற சி.பி.ராதாகிருஷ்ணனை மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜு, ராம் மோகன் நாயுடு, பிரஹலாத் ஜோஷி, பூபேந்தர் யாதவ் உள்ளிட்ட தேஜ கூட்டணி கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் வரவேற்று வாழ்த்துகளை கூறினர். தன்னை ஆதரிக்கும்படி தலைவர்களிடம் சி.பி.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்தார். கூட்டத்துக்கு பிறகு கிரண் ரிஜிஜு கூறுகையில் வரும் 20ம்தேதி சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனுவை தாக்கல் செய்வார் என்றார். தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஒரு அறிமுக சந்திப்பாக இன்றைய கூட்டம் நடந்தது. சி.பி. ராதாகிருஷ்ணன் போன்ற ஒரு நடுநிலையான நபரை துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்ததில் நாங்கள் பெருமை கொள்கிறோம்; அவரை அனைத்து கட்சியினரும் ஆதரிப்பார்கள் என நம்புகிறோம் என கிரண் ரிஜிஜூ கூறினார்.