இண்டியா சிமென்ட்ஸ் சீனிவாசன் எதிர்கால திட்டம் என்ன? NDIA Cements - Birla Deal| Ultratech Cement
நாட்டின் முன்னணி சிமென்ட் உற்பத்தி நிறுவனமான அல்ட்ரா டெக், உற்பத்தி ம ற்றும் விற்பனையை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளது. வட மாநிலங்களில் சிமென்ட் விற்பனையில் கோலோச்சி வரும் குமார் மங்களம் பிர்லா, தென்னகத்திலும் தன் வர்த்தகத்தை பெருக்க திட்டமிட்டு, தமிழகத்தை சேர்ந்த முன்னணி சிமென்ட் நிறுவனமான இண்டியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் 23 சதவீத பங்குகளை கடந்த மாதம் வாங்கினார். இண்டியா சிமென்ட்ஸ்சின் ஒரு பங்கு விலை 390 ரூபாய் என நிர்ணயித்து, 23 சதவீத பங்குகளை ஏற்கனவே பிர்லா வாங்கிய நிலையில், தற்போது மேலும் 32.7 சதவீத பங்குகளை வாங்க திட்டமிட்டுள்ளார். இதற்காக, அல்ட்ராடெக் நிறுவனத் தலைவர் குமார் மங்களம் பிர்லா மற்றும் இண்டியா சிமென்ட்ஸ் நிர்வாக இயக்குனர் சீனிவாசன் இடையே 3,954 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் உற்பத்தி திறன் ஆண்டுக்கு 1.4 கோடி மெட்ரிக் டன்னாக உள்ளது. ஆண்டுக்கு 15.3 கோடி டன் சிமென்ட் உற்பத்தி செய்யும் அல்ட்ரா டெக் நிறுவனம், நாட்டின் முன்னணி சிமென்ட் உற்பத்தி நிறுவனமாக திகழ்கிறது. இண்டியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் உற்பத்தி திறனும் சேரும்போது, அல்ட்ராடெக் நிறுவனத்தின் உற்பத்தி திறன் ஆண்டுக்கு 16.7 கோடி டன்னாக உயரும். இது, அல்ட்ராடெக் நிறுவனத்தின் வளர்ச்சிப் பாதையில் ஒரு மைல்கல் என, குமார் மங்களம் பிர்லா தெரிவித்தார். 2027ல் அல்ட்ராடெக்கின் உற்பத்தி திறன் 20 கோடி டன்னாக அதிகரிக்கவும் குமார் மங்களம் பிர்லா திட்டமிட்டுள்ளார். சிமென்ட் உற்பத்தியில் அல்ட்ரா டெக் நிறுவனத்துக்கு அடுத்தபடியாக கவுதம் அதானியின் அம்புஜா சிமென்ட்ஸ் நிறுவனம், ஆண்டுக்கு 9 கோடி டன் சிமென்ட் உற்பத்தியுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. அதானியும் தன் சிமென்ட் உற்பத்தி தொழிலை விரிவுபடுத்தும் நோக்குடன் பல்வேறு சிறிய நிறுவனங்களை கையகப்படுத்தி வருகிறார்.