கட்சியினர் அப்படி அழைப்பது ராகுலுக்கு ரொம்பவே பிடித்திருக்கு
கட்சியினர் அப்படி அழைப்பது ராகுலுக்கு ரொம்பவே பிடித்திருக்கு வெளிநாட்டு அரசியலில், எதிர்க்கட்சி தலைவரை நிழல் பிரதமர் என அக்கட்சியினர் அழைப்பது வழக்கம். அந்த வழக்கம் நம் நாட்டிலும் தொற்றி விட்டது. ராகுல் தான் நிழல் பிரதமர் என, காங்., கட்சியினர் பேசத் துவங்கியுள்ளனர். லோக்சபா தேர்தலில், 99 தொகுதிகளை கைப்பற்றியுள்ள காங்கிரஸ், ஆட்சியை பிடித்து விட்டது போலவே மகிழ்ச்சியில் உள்ளது. பார்லிமென்டில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சரியான போட்டி கொடுத்து, நீட் உட்பட பல விஷயங்களில், மோடி அரசுக்கு தலைவலி கொடுக்க ஆரம்பித்து விட்டது. நிழல் பிரதமர் என கட்சியினர் அழைப்பது ராகுலுக்கு பிடித்துள்ளது; அவரும் சந்தோஷமாக உள்ளார் என, காங்கிரஸ் தலைவர்கள் கூறினாலும், கூட்டணிக்குள் இதற்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, நிழல் பிரதமர் வார்த்தைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இண்டியா கூட்டணியில் சேராமல், தம் மாநிலத்தில் எதிர்க்கட்சி கூட்டணிக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தியவர் மம்தா. ராகுலை யாரும் நிழல் பிரதமர் என அழைக்கக் கூடாது என தமது கட்சியினருக்கு உத்தரவு போட்டு இருக்கிறார். இவரை போலவே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரும், நிழல் பிரதமர் அடைமொழிக்கு எதிராக இருக்கிறார். ஆனால், இதை பற்றியெல்லாம் காங்கிரஸ்சோ, ராகுலோ கண்டுகொள்ளவே இல்லை.