இந்த காரியத்தை பண்ணது திமுக? வானதி பகீர் | BJP MLA Vanathi | neet issue 2024
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதி சுவர்களில் பிரிவினைவாத வாசகங்கள் எழுதி இருந்தது பற்றி பாஜ எம்எல்ஏ வானதி பல சந்தேகங்களை கிளப்பி உள்ளார். அவரது அறிக்கை: கோத்தகிரி பகுதியில் ரோட்டோர சுவர்களில், நீட் தேர்வை இந்தியா திணிக்கிறது; இந்தியாவில் இருந்து தமிழகம் வெளியேற வேண்டும் என்று ஆங்கிலத்தில் எழுதி இருக்கின்றனர். இந்தியா ஒழிக என்பது போன்ற வாசகங்களும் எழுதப்பட்டுள்ளன. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு என்பது சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. 7 ஆண்டுகளாக நீட் தேர்வு வெற்றிகரமாக நடந்து வருகிறது. இப்போது பார்லிமென்ட் நடக்கும் சூழலில் தேர்வு குறித்து பல புகார்கள் எழுந்தன. இது பற்றி சிபிஐ விசாரணைக்கு பாஜ அரசு உத்தரவிட்டுள்ளது. நியாயமான முறையில் நிபுணர் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. எந்த திட்டத்தையும் ஜனநாயக வழியில் எதிர்க்க உரிமை உள்ளது. ஆனால் நீட் எதிர்ப்பு என்ற பெயரில் தேச பிரிவினைவாதம் தூண்டுவதை ஏற்க முடியாது. இது மன்னிக்க முடியாத குற்றம். கோத்தகிரியில் இந்தியா ஒழிக என்ற வாசகம் மட்டுமே கையால் எழுதப்பட்டுள்ளது. மற்ற பிரிவினைவாத வாசகங்கள் பிரின்டிங் பிளாக் தயாரித்து எழுதி உள்ளனர். தேச பிரிவினைவாதத்தை திட்டமிட்டு பிரச்சாரம் செய்வது தெளிவாக தெரிகிறது. நாட்டின் ஒற்றுமைக்கு எதிராக செயல்படும் சக்திகளை திமுக பின்னணியில் இருந்து இயக்குகிறதோ என்று சந்தேகம் உள்ளது. காரணம் திமுக தனித்தமிழ்நாடு என்பதை அடிப்படையாக கொண்ட கட்சி. பின்நாட்களில் பிரிவினை கோரிக்கையை அக்கட்சி கைவிட்டது. ஆனால் மக்களிடம் பிரிவினை எண்ணத்தை விதைப்பதை ஒரு போதும் திமுக கைவிடவில்லை. இப்போது பிரிவினையை விதைக்க ஓர் ஆயுதமாக நீட் எதிர்ப்பை கையில் எடுத்துள்ளது. பிரிவினைவாதத்தை ஒரு போதும் அனுமதிக்க கூடாது. இதை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். பிரிவினை வாசகம் எழுதியவர்களை கண்டறிந்து கைது செய்ய முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வானதி வலியுறுத்தினார்.