மாணவன் கடத்தலுக்கு பின்னணி இது தான் | Madurai | Crime | Madurai Police
மாணவன் கடத்தலுக்கு பின்னணி இது தான் | Madurai | Crime | Madurai Police மதுரை எஸ்.எஸ்.காலனியைச் சேர்ந்தவர் மைதிலி ராஜலட்சுமி. தனியார் பள்ளியில் படிக்கும் இவரது 14 வயது மகனை வியாழனன்று சிலர் கடத்தினர். ஆட்டோவில் பள்ளி செல்லும் போது வழிமறித்து ஆட்டோ டிரைவர் பால்பாண்டியையும் கடத்தி சென்றனர். மைதிலிக்கு போன் செய்த கடத்தல் காரர்கள் மகன் உயிரோடு வேண்டுமானால் 2 கோடி தரவேண்டும் என மிரட்டல் விடுத்தனர். மைதிலி போலீசில் புகார் செய்தார். போலீசார் நெருங்குவதை அறிந்து மாணவனையும், பால்பாண்டியையும் கிண்ணிமங்கலம் பகுதியில் இறக்கிவிட்டு கடத்தல்காரர்கள் தப்பினர். இது குறித்து போலீசார் கூறியதாவது; விளாத்திக்குளத்தை சேர்ந்த சூர்யா என்ற பெண் சில ஆண்டுகளுக்கு முன் மைதிலி, அவரது கணவர் ராஜ்குமாரிடம் வட்டிக்கு 2 கோடி கடன் வாங்கினார். குறிப்பிட்ட காலத்திற்கு பிறகும் திருப்பி தராமல், கடனுக்கு ஈடாக மதுரையில் உள்ள சில சொத்துகளை சூர்யா எழுதி கொடுத்தார். பணமும் சொத்தும் இல்லாத நிலையில் மைதிலியின் மகனை கடத்தி 2 கோடி பறிக்க சூர்யா திட்டமிட்டார். துாத்துக்குடி மகாராஜா, போடி செந்தில் உள்ளிட்ட கூலிப்படையினரை அணுகினார். திட்டமிட்டப்படி 4 பேர் ஆம்னி வேனில் மாணவனையும், ஆட்டோ டிரைவரையும் கடத்தினர். கூட்டாளிகள் இருவர் டூவீலரில் பின்தொடர்ந்து வந்தனர். போலீஸ் தேடுவதை அறிந்த சூர்யா, கூலிப்படையினருக்கு தகவல் கொடுத்ததால் இருவரையும் இறக்கிவிட்டு தப்பிச்சென்றனர். சூர்யாவின் கணவர் குஜராத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக உள்ளார். அவருக்கு தன் மனைவியின் நடவடிக்கைகள் குறித்து தெரியுமா என தெரியவில்லை என்றனர். விளாத்திகுளம் சூர்யா, துாத்துக்குடி மகாராஜா, போடி செந்தில்குமார், மதுரை கிஷோர் உட்பட 7 பேரை எஸ்.எஸ்.காலனி போலீசார் கைது செய்துள்ளனர். இதில் செந்தில்குமார் போலீஸ் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டவர்.