மீண்டும் வரும் அரக்கன் ; ஆட்டம் காணும் வட மாநிலங்கள் | Chandipura virus | Gujarat
மீண்டும் வரும் அரக்கன் ; ஆட்டம் காணும் வட மாநிலங்கள் | Chandipura virus | Gujarat | Gujarat Chandipura | Fever குஜராத்தில் சந்திபுரா என்ற கொடிய வைரஸ் பரவி வருவதாகவும், இதனால் 8 குழந்தைகள் இறந்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக குஜராத் சுகாதார அமைச்சர் ருஷிகேஷ் படேல் கூறுகையில்; குஜராத் சபர்கந்தாவின் ஹிமத்நகரில் உள்ள மருத்துவமனையில் ஒரு வாரத்துக்கு முன் 4 குழந்தைகள் மர்ம காய்ச்சலால் இறந்தனர். இப்போது மேலும் 4 குழந்தைகள் இறந்ததால் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. சந்திபுரா வைரஸ் குழந்தைகளின் இறப்புக்கு காரணமாக இருக்கலாம் என டாக்டர்கள் சந்தேகிக்கின்றனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் இறந்தவர்களின் ரத்த மாதிரி புனேவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு உள்ளது. குஜராத்தின், சபர்கந்தா, ஆரவல்லி, மஹிசாகர், கெடா, மெஹ்சானா மற்றும் ராஜ்கோட்டில் இது தொடர்பான காய்ச்சலுடன் குழந்தைகள் அட்மிட் ஆகின்றனர். மிகவும் அரிதாக தாக்கப்படும் இத்தகைய வைரசுக்கு இதுவரை தடுப்பூசிகள் கண்டுபிடிக்கவில்லை, தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றார். இந்த வைரஸ் தாக்கினால் முதலில் காய்ச்சல் வரும். உடல் வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி, கடுமையான தலைவலி இருக்கும். வைரஸ் தீவிரமடையும் போது மூளையை பாதிக்கும். அறிகுறிகள் தோன்றிய 24 முதல் 72 மணி நேரத்திற்குள் மரணத்திற்கு வழிவகுக்கும் என டாக்டர்கள் கூறுகின்றனர். பெரும்பாலும் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளையே இந்த வைரஸ் அதிகம் தாக்குகிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திரா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் 322 குழந்தைகள் இந்த வைரசால் இறந்துள்ளனர். 1965லும் மகாராஷ்டிராவில் பழங்குடியின கிராமத்தை சேர்ந்த 17 உயிர்களை இது பறித்துள்ளது. அப்போது தனிமைப்படுத்தப்பட்ட சண்டிபுரா கிராமத்தின் பெயர் இந்த வைரசுக்கு சூட்டப்பட்டு உள்ளது. இந்த நோய்க்கிருமி கொசு மற்றும் ஈக்கள் மூலம் பரவுகிறது. இது ஒரு தொற்று நோய் அல்ல எனவும் டாக்டர்கள் தரப்பில் கூறப்படுகிறது. அசுத்தமான நீர் மற்றும் குப்பை தேங்குமிடத்தில் இந்த நோய்க்கிருமி உயிர் வாழும். வீடுகளையும், சுற்றுப்புறங்களையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும், குழந்தைகளை கொசுக்கடியிலிருந்து பாதுகாக்க வேண்டும் என டாக்டர்கள் அட்வைஸ் செய்துள்ளனர்.