நடுநடுங்க வைக்கும் சைக்கோ கில்லரின் உண்மை முகம் | Serial Killer
நடுநடுங்க வைக்கும் சைக்கோ கில்லரின் உண்மை முகம் | Kenyan Serial Killer | Collins Jumaisi Khalusha உலகத்தையே நடுநடுங்க வைத்திருக்கிறான் கென்யாவை சேர்ந்த சைக்கோ கொலைகாரன். இளம்பெண்கள் தான் அவன் குறி. ஒன்றல்ல... இரண்டல்ல... சீரியல் கொலை பாணியில் 42 பேரை கொன்று குவித்து இருக்கிறான். ஹாலிவுட் சினிமாக்களில் கூட இப்படியொரு சைக்கோ கொலைகாரன் கேரக்டர் இருந்திருக்க வாய்ப்பில்லை. அந்த அளவுக்கு கொடூரமான முறையில் ஒவ்வொரு கொலையையும் செய்திருக்கிறான். கொலையாளி சிக்கி விட்டான். ஆனால் இந்த 42 கொலைகளின் பின்னணியில் பல மர்மங்கள் நிலவுகின்றன. உண்மையில் அப்படி என்ன தான் நடந்தது? கொலையில் நீடிக்கும் மர்மம் என்ன? அடுத்து என்ன நடக்க போகிறது? என்பதை பார்க்கலாம். கென்யாவின் தலைநகர் நைரோபியை ஒட்டி முகுரு என்ற குடிசை பகுதி உள்ளது. அங்குள்ள கைவிடப்பட்ட குவாரி தான் க்ரைம் சீன். நீர் நிரம்பிய அந்த குவாரியை, சுற்றி இருக்கும் மக்கள் பிரமாண்ட குப்பை தொட்டியாக பயன்படுத்தி வந்தனர். குப்பை குவியலுக்கு ஊடே விநோதமான முறையில் கிடந்த பிளாஸ்டிக் சாக்கு மூட்டையை பார்த்து சிலர் சந்தேகம் அடைந்தனர். அதை மீட்டு கரைக்கு கொண்டு வந்து திறந்தனர். உள்ளே வெட்டப்பட்ட நிலையில் பெண் சடலம் இருந்தது. அதிர்ச்சி அடைந்தனர். உடனே ஸ்பாட்டுக்கு போலீஸ் வந்தது. உள்ளே இதே போல் பல மூட்டைகள் இருப்பதை கண்டனர். தன்னார்வலர்கள் உதவியுடன் ஒவ்வொன்றாக எடுத்து கரைக்கு கொண்டு வந்தனர். மொத்தம் 9 மூட்டைகள் கிடைத்தன. ஒவ்வொரு மூட்டையிலும் அழுகிய நிலையில் சடலம் இருந்தது. எல்லா சடலங்களும் வெட்டப்பட்டு இருந்தன. எல்லாமே பெண் சடலம் தான். முன்னதாக காட்டு தீ போல வதந்தி பரவியது. அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்தவர்களை பாதுகாப்பு படையினர் கொன்று மூட்டை கட்டி குவாரியில் வீசியதாக சிலர் பரப்பி விட்டனர். குவாரியை சுற்றி கூட்டம் கூட்டமாக மக்கள் குவிந்தனர். அவர்களை கண்ணீர் புகை குண்டுகளை வீசி போலீசார் கலைத்தனர். அதன் பின்னர் சடலங்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டனர். ஒவ்வொன்றும் வெவ்வேறு காலத்தில் குவாரியில் வீசப்பட்டது தெரியவந்தது. ஒரு சடலம் மட்டும் பெரிய அளவில் அழுகவில்லை. அடையாளம் காணும் வகையில் இருந்தது. சில நாட்கள் முன்பு தான் அதை குவாரியில் போட்டிருக்க வேண்டும் என்று போலீசார் கருதினர். விசாரணையில் அது ஜோசப்பின் ஓவினோ என்ற இளம்பெண் சடலம் என்பது தெரிந்தது. இதை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர். ஓவினோ ஜூன் 28ம் தேதி வீட்டை விட்டு வெளியே போனார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை. அவர் போகும் போது இதே துணி தான் அணிந்திருந்தார். இதே மாதிரி தான் தலை முடியை பின்னி இருந்தார் என்று குடும்பத்தினர் கூறினர். ஓவினோ செல்போன் நம்பரை வைத்து போலீசார் துப்பு துலக்கினர். அவரது செல்போனுக்கு அடிக்கடி ஒரு நம்பரில் இருந்து கால் வந்திருந்தது. அந்த நம்பர் யாருடையது என்று ஆய்வு செய்த போது, காலின்ஸ் ஜுமைசி கலுஷா என்பவருடையது என்று தெரிந்தது. குவாரியில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் காலின்ஸ் வீடு இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அவன் தான் கொலைகாரன் என்பதை கிட்டத்தட்ட உறுதி செய்தனர். அவனது வீட்டுக்கு விரைந்தனர். அவன் இல்லை. அதே பகுதியில் உள்ள ஒரு மதுபான பாருக்கு சென்றிருப்பது தெரிந்தது. போலீசார் அங்கு சென்ற போது, எதுவும் தெரியாதது போல் மது குடித்துக்கொண்டு இருந்தான் காலின்ஸ். அவனை சுற்றிவளைத்ததனர். கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். ஓவினோவை நான் தான் கொலை செய்தேன் என்றான். அதுமட்டும் அல்ல. இதுவரை 42 இளம்பெண்களை தீர்த்துக்கட்டி இருக்கிறேன். எல்லோருடைய உடலையும் குவாரியில் தான் வீசினேன் என்று போலீசாரை அதிர வைத்தான். அவன் வாக்குமூலம் பற்றி போலீசார் கூறியது: காலின்ஸ் சாதாரண நபர் அல்ல. ஒரு காட்டுமிராண்டி போன்றவன். சைகோ கொலைகாரன். ஒரு சீரியல் கில்லர். அவனுக்கு 33 வயது தான் ஆகிறது. இதுவரை 42 இளம்பெண்களை கொன்றுள்ளான். அவர்கள் எல்லோருமே 18 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள். கிட்டத்தட்ட ஒரே பாணியில் அவர்களை கொன்று இருக்கிறான். கழுத்தை நெரித்தும், பட்டா கத்தியால் வெட்டியும் கொலை செய்திருக்கிறான். கொன்ற பிறகு அனைவரையும் ஒரே மாதிரியான சாக்கு பையில் போட்டு, அதே குவாரியில் தான் வீசி இருக்கிறான். அவன் செய்த முதல் கொலை அவனது மனைவி தான். 2022ல் மனைவியை தீர்த்துக்கட்டினான். அடுத்த 2 ஆண்டில் 42 இளம்பெண்களை கொன்று குவித்துவிட்டான். நாங்கள் அவனை பிடிக்கும் போது கூட இன்னொரு இளம்பெண்னை கொலை செய்யும் திட்டத்துக்காக தான் காத்துக்கொண்டு இருந்தான். அவனுக்கு இளம்பெண்கள் ஒருவித வெறுப்பு இருந்திருக்கிறது. மனித உயிர்களை துச்சமாக மதிக்க கூடிய காட்டு மிராண்டி. இதுவரை கிடைத்துள்ள 9 சடலங்களில் ஓவினோவை தவிர மற்றவர்கள் அடையாளம் தெரியவில்லை. கொலைக்கு முன்பு பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தானா என்பது தெரியவில்லை. சடலங்களை தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தி இருக்கிறோம். மீதம் உள்ள 33 சடலங்களை தேடும் பணியும் நடக்கிறது என்று போலீசார் கூறினர். சைக்கோ கொலைகாரன் காலின்ஸ் அளித்த வாக்குமூலம் அடிப்படையில் மட்டுமே இந்த கொலைகளை போலீசார் உறுதி செய்யவில்லை. அவனது வீட்டில் சோதனை செய்திருந்தனர். அப்போது கொலைக்கு பயன்படுத்திய கத்தி, ஒரு லேப்டாப், 10 செல்போன்கள் கிடைத்தன. சில பெண்களின் ஐடி கார்டு, பெண்களின் உள்ளாடைகளும் சிக்கின. அது தவிர பிளாஸ்டிக் சாக்கு பைகள், நைலான் கயிறு, பேக்டரியில் பயன்படுத்தும் கையுறைகள் போன்றவை சிக்கின. காலின்ஸ் வீட்டில் சிக்கிய கயிறு, சாக்கு பைகளும் சடலங்களை கட்டி இருந்த கயிறு, சாக்கு பைகளும் ஒன்று தான். அதே போல் தனது மனைவியை அவன் கொலை செய்ததற்கும் எவிடன்ஸ் உள்ளது. இறந்தவர்கள் உடமைகளுடன் அவளது ஐடி கார்டை கைப்பற்றி உள்ளோம் என்று போலீசார் கூறினர். கென்யா மட்டும் இன்றி மொத்த உலகத்தையும் அதிர வைத்திருக்கும் இந்த சம்பவங்களில் சில சந்தேகங்களையும் கிளப்புகின்றனர். முதல் விஷயம். சடலங்கள் கிடைத்த குவாரி போலீஸ் ஸ்டேஷனில் இருந்து 120 மீட்டர் தூரத்தில் தான் இருக்கிறது. சைக்கோ கொலைகாரன் வீடும் பக்கம் தான். போலீஸ் ஸ்டேஷன் பக்கத்திலேயே இவ்வளவு கொலை நடந்து இருக்கிறது. கொலையாளியும் நடமாடி இருக்கிறான். இவ்வளவு நாள் போலீசுக்கு எப்படி தெரியாமல் போனது என்ற கேள்வி எழுகிறது. அடுத்த விஷயம். முதல் சடலத்தை கண்டுபிடித்தது போலீஸ் அல்ல. அதன் பின்னாலும் ஒரு கதை இருக்கிறது. காணாமல் போன இளம்பெண் ஓவினோவை குடும்பத்தினர் தேடி வந்தனர். போலீசிலும் புகார் செய்திருந்தனர். இதற்கிடையே குடும்பத்தில் ஒருத்தருக்கு ஓவினோ பற்றி கனவு வந்தது. அவரது கண்ணில் குவாரியும் அதில் ஓவினோ சடலமும் இருப்பது போல் காட்சி தோன்றி இருக்கிறது. உடனே ஓவினோ குடும்பத்தினர் குவாரிக்கு வந்தனர். அந்த பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு பணம் கொடுத்து குவாரியில் இறங்கி தேடும்படி கேட்டுக்கொண்டனர். அப்போது தான் ஒரு சடலம் கிடைத்தது. அதன் பிறகு தான் போலீஸ் ஸ்பாட்டுக்கு வந்து தேடும் பணி தீவிரப்படுத்தியது. 9 சடலங்களும் கிடைத்தன. ஓவினோ குடும்பத்தினருக்கு அவர் கொலை செய்யப்பட்டதும், அவரது சடலம் கிடக்கும் இடமும் எப்படி தெரிந்தது? அவர்கள் சொல்லும் கனவு கதையை போலீஸ் நம்புகிறதா என்று ஒரு தரப்பு கேள்வி கேட்கிறது. ஆனால் போலீசோ, நாங்கள் அந்த கட்டுக்கதையை நம்பவில்லை. காலின்ஸ் ஒரு சைக்கோ கொலைகாரன். அவன் தான் இந்த கொலைகளை செய்து இருக்கிறான். எல்லா எவிடன்சும் உள்ளது. இப்போது தெரிய வேண்டி இருப்பது மொத்தம் அவன் எத்தனை கொலை செய்தான்? அவன் மனைவி உட்பட மற்றவர்கள் சடலம் எங்கே? எதற்காக கொலை செய்தான் என்பது மட்டும் தான் என்கின்றனர். விசாரணை இன்னும் துவக்க கட்டத்தில் தான் உள்ளது. அடுத்தடுத்த விசாரணையில் எல்லா சந்தேகங்களுக்கு தானாகவே விடை கிடைக்கும் என்று அடித்து சொல்கிறது கென்ய போலீஸ்.