குழு அறிக்கை பெயரில் திமுக கொள்கை பரப்புவதா
குழு அறிக்கை பெயரில் திமுக கொள்கை பரப்புவதா தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையின் அறிக்கை: பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே ஜாதி, இன மோதல்களை தடுக்க, முன்னாள் நீதிபதி சந்துரு தலைமையில், ஒரு நபர் குழு கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது. அக்குழுவின் அறிக்கை முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது. அந்த அறிக்கையின் பல பரிந்துரைகள், பொதுமக்களால் ஏற்றுக் கொள்ள முடியாதவை. மாணவர்களிடையே வேற்றுமையை விதைப்பவை. நெற்றியில் விபூதி, குங்குமம் தரிப்பதையும், புனித கயிற்றை கையில் கட்டுவதையும் தடுப்பது என்ற இந்து மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும் பரிந்துரையை, இந்து சமயத்தின் அடையாள அழிப்பாகத்தான் பார்க்க முடியுமே தவிர, வேறு எந்தக் காரணம் கூறினாலும், அது திமுகவின் நாடகம் தான். பள்ளிகளில், மாணவர் தேர்தல் நடத்துவது என ஒரு ஆபத்தான பரிந்துரை அறிக்கையில் உள்ளது. கல்லூரி தேர்தல்களில் புகுந்து திமுக உள்ளிட்ட கட்சிகள், மாணவ சமுதாயத்தை பாழ்படுத்தியது போதாதா? உங்கள் அரசியல் லாபத்துக்காக, பள்ளி மாணவர்களையும் பலியிட வேண்டுமா? எனவேதான் பாஜ இதை எதிர்த்து கண்டன தீர்மானம் நிறைவேற்றியது. அறிக்கைக்கான எதிர்ப்பை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அறிக்கை பற்றி ஒரு விழாவில் பேசிய சந்துரு, நூலகம், அறநெறி பற்றியெல்லாம் பேசி அது பற்றி பாஜவுக்கு என்ன தெரியும் கேட்டு இருக்கிறார். தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடை திறந்திருக்கும் திமுக அரசின் குழுவில் இருந்து கொண்டு நூலகம், கலாச்சாரம் பற்றியெல்லாம் எங்களுக்கு அவர் பாடம் நடத்த தேவையில்லை. திமுக ஆட்சிக்கு வரும் முன்னர் ஏன் மாணவ சமுதாயத்தினரிடையே இது போன்ற ஜாதி பிரிவினைகள் பெருமளவில் இல்லை என்பதுதான் சந்துரு அறிக்கையின் முதல் கேள்வியாக இருந்திருக்க வேண்டும். அறிக்கையில் காவிமயமாக்குதல் என்ற வார்த்தையை குறிப்பிட்டு இருக்கும்போதே, உங்கள் அரசியல் நிலைப்பாடும். இந்த அறிக்கையின் நோக்கமும் வெளிப்படையாக தெரிந்துவிட்டது திமுக கொள்கைகளை, மாணவ சமுதாயத்தின் மீது திணிப்பதைத்தான் எதிர்க்கிறோம். அரசியல் பேச வேண்டும் என்ற விருப்பம் இருந்தால், சந்துரு அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைந்து கொள்ளலாம். அதை விடுத்து, சுயலாபத்துக்காக, அரசு அமைக்கும் குழுக்களில் அமர்ந்து கொண்டு, மக்களின் வரிப்பணத்தில், திமுகவின் கொள்கைகளை, குழு அறிக்கை என்ற பெயரில் மாணவ சமுதாயத்தின் மீது திணித்தால், அதற்கான எதிர்ப்பும் நிச்சயம் இருக்கும் என அண்ணாமலை கூறியுள்ளார்.