நிபா வைரஸ் ஆட்டம் ஆரம்பம்-அமலானது ஊரடங்கு | Nipah Virus | kerala nipah virus outbreak
நிபா வைரஸ் ஆட்டம் ஆரம்பம்-அமலானது ஊரடங்கு | Nipah Virus | kerala nipah virus outbreak | Pandikkad கோவிட்டை விட கொடியா நோயாக கருதப்படும் நிபா வைரஸ் தாக்கி கேரளாவில் 14 வயதான சிறுவன் மரணம் அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மலப்புரம் மாவட்டம் பாண்டிக்காடு பகுதியை சேர்ந்த சிறுவன் 9ம் வகுப்பு படித்து வந்தான். 10 நாட்களுக்கு முன்பு அவனுக்கு காய்ச்சல் வந்தது. தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டான். அவனை பரிசோதித்த டாக்டர்கள் நிபா வைரஸ் அறிகுறிகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அரசுக்கும் தகவல் தெரிவித்தனர். அவனது சளி மாதிரியை புனேயில் உள்ள தேசிய வைரஸ் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே சிறுவன் கோழிகோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். தனி வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மூச்சுத்திணறல் அதிகமானதால் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை வழங்கப்பட்டது. சனிக்கிழமை பரிசோதனை முடிவு வந்தது. சிறுவனுக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது. இன்று காலை சிகிச்சை கை கொடுக்காமல் சிறுவன் மரணம் அடைந்தான். இது பற்றி பேட்டி கொடுத்த கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ், காலை 10:50 மணிக்கு சிறுவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. எவ்வளவோ போராடியும் காப்பாற்ற முடியவில்லை. 11:30 மணி அளவில் சிறுவன் உயிர் பிரிந்தது. மருத்துவ நடைமுறைகளை பின்பற்றி சிறுவன் உடல் அடக்கம் செய்யப்படும் என்றார். சிறுவனுடன் மொத்தம் 240 பேர் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். இவர்களில் 4 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறி இருப்பது உறுதியானது. அவர்களின் சளி மாதிரி ஆய்வுக்காக புனே ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இப்போது 4 பேரின் நிலைமையும் கவலைக்கிடமாக உள்ளது. ஒருவர் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். சிறுவன் ஊரான பாண்டிக்காடு பஞ்சாயத்து பகுதியில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மலப்புரம் மாவட்ட மக்கள் கவனமுடன் இருக்கும்படி சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. பறவைகள் தின்ற பழங்களை சாப்பிட வேண்டாம். திறந்த பாத்திரங்களில் வைக்கப்பட்டுள்ள கள் உள்ளிட்ட எந்த பானமும் அருந்த வேண்டாம். பழங்களை நன்றாக கழுவி சாப்பிட வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. கேரளாவில் முதல் முறையாக 2018ல் நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. அதன் பிறகு 2019, 2021, 2023, 2024 என இதுவரை 5 முறை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 2018ல் 18 பேர் பாதிக்கப்பட்டனர். அதில் 17 பேர் மரணம் அடைந்தனர். 2021ல் ஒருத்தர் இறந்தார். 2023ல் 2 பேர் மரணம் அடைந்தனர். நிபா வைரஸ் எந்த அளவுக்கு கொடிதானது என்றால், இந்த 5 முறை ஏற்பட்ட பாதிப்பில் நிபா பாதித்த 6 பேர் மட்டுமே நோயில் இருந்து உயிர் தப்பினர். மற்ற அனைவரும் மரணம் அடைந்து விட்டனர்.