2012 ஆய்வு அறிக்கையை சுட்டிக்காட்டிய அமைச்சர் bihar| Special status| NIthish kumar
2012 ஆய்வு அறிக்கையை சுட்டிக்காட்டிய அமைச்சர் bihar| Special status| NIthish kumar லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் மத்தியில் 3வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. ஆதரவு தந்த கட்சிகளில் பீகாரின் ஐக்கிய ஜனதாதளம், ஆந்திராவின் தெலுங்கு தேசம் கட்சிகள் முக்கியமானவை. இந்த இரண்டு கட்சிகளும் தங்கள் மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கூட்டணி ஆட்சி அமைந்ததில் இருந்தே கேட்டு வருகின்றன. பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பு நடந்த அனைத்து கட்சி கூட்டத்திலும் கூட, இக்கட்சிகள் தங்கள் கோரிக்கையை முன்வைத்தன. ஆட்சிக்கு ஆதரவு அளிக்கும் கட்சிகளின் கோரிக்கையை பாஜ அரசு நிறைவேற்றுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இச்சூழலில், பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது பற்றி லோக்சபாவில் ஜேடியு கட்சி எம்பி ராம்பிரித் மண்டல் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு எழுத்து பூர்வமாக பதில் அளித்த மத்திய நிதி இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கான முகாந்திரம் இல்லை என்று தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் தேசிய வளர்ச்சி கவுன்சிலால் சில மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. அது சில வரையறைகளுக்கு உட்பட்டது. அந்த மாநிலங்கள் மலைப்பாங்கான நிலப்பரப்பை கொண்டிருக்க வேண்டும். குறைந்த மக்கள் தொகை அடர்த்தி அல்லது பழங்குடியினரை கணிசமாக கொண்டிருக்க வேண்டும்; அண்டை நாடுகளின் எல்லையில் அமைந்திருக்க வேண்டும். பொருளாதாரம், உள்கட்டமைப்பில் பின்தங்கிய மாநிலமாக இருக்க வேண்டும்; சொந்த மாநில நிதி வருவாயை கொண்டு மாநில தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாமல் இருக்க வேண்டும். இந்த அளவுகோளின் அடிப்படையில், கடந்த 2012ம் ஆண்டே பல்துறை அமைச்சர்கள் குழு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதன்படி, சிறப்பு அந்தஸ்து பெறக்கூடிய வரையறைகளில் பீகார் இடம் பெறவில்லை என்று இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்தார். இதை சுட்டிக்காட்டி, பீகாரின் எதிர்கட்சியான லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் நிதிஷ்குமாரை விமர்சித்துள்ளது. முதல்வர் நிதிஷும் அவரது ஜேடியு கட்சியும் மத்திய அரசின் அதிகாரங்களை தான் விரும்புகிறார்கள். மாநில நலன் பற்றி அவர்களுக்கு கவலை இல்லை. அரசியல் நாடகமாடி பீகார் மக்களை ஏமாற்றுகிறார்கள் என கூறியுள்ளது.