நில மோசடி வழக்கில் மாஜிக்கு 2 நாள் போலீஸ் கஸ்டடி
நில மோசடி வழக்கில் மாஜிக்கு 2 நாள் போலீஸ் கஸ்டடி கரூரில் தனக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை, அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் அபகரித்துவிட்டதாக பிரகாஷ் என்பவர் போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். தான் எந்த நேரத்திலும் கைதாகலாம் என உணர்ந்த விஜயபாஸ்கர் கேரளாவில் தலைமறைவானார். விஜயபாஸ்கரை சிபிசிஐடி போலீசார் தீவிரமாக தேடினர். கடந்த 16-ம் தேதி திருச்சூரில் கைது செய்தனர். அவரை கரூருக்கு அழைத்து வந்து, கரூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட் உத்தரவுப்படி, கடந்த 17-ம் தேதி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ள விஜயபாஸ்கர், ஜாமின் கோரி கரூர் கோர்ட்டில் மனு செய்தார். அவரது ஜாமின் மனு இன்று விசாரணைக்கு வந்தது. விஜயபாஸ்கருக்கு ஜாமின் தர போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. விஜயபாஸ்கரிடம் 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க சிபிசிஐடி தரப்பில் அனுமதி கோரப்பட்டது. இது தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பரத்குமார், 2 நாள் கஸ்டடியில் விஜயபாஸ்கரிடம் விசாரிக்க சிபிசிஐடிக்கு அனுமதி வழங்கினார். இதைையடுத்து, விஜயபாஸ்கரிடம் போலீசார் விசாரணையை துவங்கியுள்ளனர்.