உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பட்ஜெட்டில் ஆந்திராவுக்கு ஜாக்பாட்: சந்திரபாபு மகிழ்ச்சி

பட்ஜெட்டில் ஆந்திராவுக்கு ஜாக்பாட்: சந்திரபாபு மகிழ்ச்சி

பட்ஜெட்டில் ஆந்திராவுக்கு ஜாக்பாட்: சந்திரபாபு மகிழ்ச்சி மோடி 3.0 அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பீகார் மற்றும் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டுமென நிதிஷ்குமார், சந்திரபாபு வைத்த கோரிக்கையை ஏற்காத மத்திய அரசு, இரு மாநிலங்களுக்கம் வளர்ச்சித் திட்ட நிதியை பட்ஜெட்டில் வாரி வழங்கியுள்ளது. குறிப்பாக, ஆந்திராவில் புதிய தலைநகர் அமைக்க 15,000 கோடி ரூபாய் மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. உணவு தானிய உற்பத்தியை பெருக்க வசதியாக, போலாவரம் நீர்ப்பாசன திட்டத்திற்கு மத்திய பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் சாலை, உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளில் மாநில அரசுக்கு மத்திய அரசு துணை நிற்கும் என மோடி அரசு உறுதி அளித்துள்ளது. விசாகப்பட்டினம் - சென்னை இடையிலான தொழில்வழித்தட திட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஆந்திராவில் இருந்து தெலங்கானா பிரிந்த பின், அமராவதியில் புதிய தலைநகரம் அமைக்கும் பணி, ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் முடக்கப்பட்டது. இதனால், போதிய நிதி ஆதாரம் இன்றியும், முதலீடுகளை ஈர்க்க முடியாமலும் முதல்வர் சந்திரபாபு நாயுடு திணறிய நிலையில், மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள் ஆந்திர அரசுக்கு புதிய தெம்பை அளித்துள்ளது. இது குறித்து, முதல்வர் சந்திரபாபு நாயுடு வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: ஆந்திர மாநிலத்தின் தேவைகளை உணர்ந்து பட்ஜெட்டில் திட்டங்களை அறிவித்த பிரதமர் மோடிக்கும், நிதி அமைச்சர் நிர்மலாவுக்கும் நன்றி. அமராவதியில் தலைநகரம், போலாவரம் நீர்ப்பாசன திட்டம், ஆந்திராவில் பின்தங்கிய பகுதிகளின் வளர்ச்சி, தொழில் வழித்தடம் ஆகியவற்றுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. ஆந்திராவை மீண்டும் கட்டமைக்க மத்திய பட்ஜெட் திட்டங்கள் உதவிகரமாக இருக்கும் என சந்திரபாபு நாயுடு கூறினார். ஆந்திராவுக்கு மிகப் பெரிய அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்த மத்திய அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறேன்; எங்கள் நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேறியுள்ளது என சந்திரபாபுவின் மகன் அமைச்சர் நாரா லோகேஷ் கூறியுள்ளார். இந்த நாள் ஆந்திர வரலாற்றில் முக்கியத்துவம் மிகுந்த நாள். எங்கள் மாநில மக்களின் கனவுகளை நிறைவேற்ற எடுத்து வைக்கும் முதல் அடி இது எனவும் நாரா லோகேஷ் கூறினார்.

ஜூலை 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !