பட்ஜெட் போராட்டத்தில் திமுக கூட்டணி கட்சிகள் சிதறியது ஏன் | DMK vs TN Cong
பட்ஜெட் போராட்டத்தில் திமுக கூட்டணி கட்சிகள் சிதறியது ஏன் | DMK vs TN Cong | issues in dmk alliance மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதாக கூறி திமுக சார்பில் இன்று காலை மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதே காரணத்துக்காக தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் மாலையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. அடுத்த மாதம் 1ம் தேதி, மாநிலம் முழுதும் மத்திய அரசு அலுவலகங்கள் முன் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக, இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் அறிவித்துள்ளன. இப்படி திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் பிரிந்து தனித்தனியாக ஆர்ப்பாட்டம் நடத்துவது பல சந்தேகங்களை கிளப்பி உள்ளது. கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு இருப்பதாக எதிர்கட்சிகள் கருதுகின்றன. இது பற்றி காங்கிரஸ் வட்டாரம் கூறியது: லோக்சபா தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வென்றதும், வெற்றி மாநாடு கோவையில் திமுக சார்பில் நடத்தப்பட்டது. அதற்கு கூட்டணி தலைவர்கள் அழைக்கப்பட்டனர்; மேடையில் ஒன்றாக கைகோர்த்தனர். அதன் பிறகு காட்சி மாறியது. சமீபத்தில் தொழிலதிபர் அதானியை திமுக அதிகார மையத்தை சேர்ந்த ஒருவர் சந்தித்து பேசினார். தொழிலதிபர் அம்பானி இல்ல திருமண விழாவில், திமுக அமைச்சர் பங்கேற்றார். மின் கட்டண உயர்வை கண்டித்து, தமிழகத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் போராட்டம் நடத்தின. ஆனால் பாஜ சார்பில் எந்த போராட்டமும் அறிவிக்கப்படவில்லை. இது திமுக மீது எல்லா கூட்டணி கட்சிகளுக்குமே பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையே கள்ளச்சாராய மரணம், ஆம்ஸ்ட்ராங் படுகொலை என பல விஷயங்களிலும் தங்களுடைய வருத்தத்தை காங்கிரசார் வெளிப்படுத்தினர். இது திமுகவுக்கு மனம் வருத்தத்தை ஏற்படுத்தியதாக அக்கட்சி தலைவர்கள் சிலர் குமுறி இருக்கின்றனர். இதற்கிடையே எங்கள் கட்சி எம்பி கார்த்தி, 2026ல் இதே கூட்டணி வென்றால் திமுக அமைச்சரவையில் காங்கிரசுக்கு பங்கு கேட்க வேண்டும் என்று செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசினார். இதுவும் காங்கிரஸ் மீது திமுக தலைமைக்கு கோபத்தை உண்டு பண்ணியது. இப்படி தொடர் நிகழ்வுகளால் இரு கட்சிகளுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு இருப்பது உண்மை தான். இதன் தொடர்ச்சி தான் பட்ஜெட்டுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்திலும் நீடித்துள்ளது. முதலில் ஆர்ப்பாட்டம் முடிவை எடுத்தது திமுக தான். கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தலாம் என அவர்கள் ஏன் யோசிக்கவில்லை என்று தெரியவில்லை. அவர்களது ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கவும் கூட்டணியினருக்கு அழைப்பு இல்லை. இதுவும் கூட்டணிகளுக்கு சற்று நெருடலை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் மத்திய அரசின் போக்கை தட்டிக்கேட்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு இருப்பதால் காங்கிரசும், எங்களை போர் கம்யூனிஸ்ட்களும் போராட்ட முடிவை எடுத்துள்ளனர் என்று காங் வட்டாரம் கூறியது.