காவிரி குடிநீர் திட்ட வளாகத்தில் சம்பவம்: மக்கள் கொதிப்பு motor operater sivagangai
காவிரி குடிநீர் திட்ட வளாகத்தில் சம்பவம்: மக்கள் கொதிப்பு motor operater sivagangai cauvery water scheme people protest சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே முசுண்டபட்டியை சேர்ந்தவர் தங்கராஜ் (56). அப்பகுதியில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட மோட்டார் அறை உள்ளது. இங்கு, ஆப்பரேட்டராக பணிபுரிந்து வந்தார். நேற்றுஇரவு குடிநீர் மோட்டார் அறையில் வழக்கம்போல பணியில் இருந்தார். அப்போது, மோட்டார் அறையில் உட்கார்ந்து மது அருந்த 2 பேர் பாட்டிலும் கையுமாக வந்தனர். அவர்களை தங்கராஜ் தடுத்தார். இது அரசு பணியிடம்: இங்கு மது அருந்தக் கூடாது என்றார். வந்த ஆசாமிகள் ஏற்கனவே போதையில் இருந்தனர். தங்கராஜின் அறிவுரையால் ஆத்திரமடைந்தனர். கையில் வைத்திருந்த மதுபாட்டிலை உடைத்து தங்கராஜ் கழுத்தில் சரமாரியாக குத்தி விட்டு தப்பிச் சென்றனர். சம்பவ இடத்திலேயே தங்கராஜ் இறந்தார். போனை தங்கராஜ் எடுக்காததால் வந்து பார்த்த குடும்பத்தினர், தங்கராஜ் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். ஊர்க்காரர்கள் பொங்கி எழுந்தனர். குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி சாலைமறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விரைவில் குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது என உறுதி அளித்ததை தொடர்ந்து மறியலை மக்கள் கைவிட்டனர். சாலை மறியலால் எஸ்.புதூர் - சிங்கம்புனரி சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரசுப்பணியில் ஈடுபட்டிருந்த அப்பாவி ஊழியரை குடிகாரர்கள் கொடூரமாக கொன்ற சம்பவத்தால் முசுண்டபட்டியில் பரபரப்பு நிலவுகிறது. மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கூட்டு குடிநீர் திட்ட மோட்டார் பம்ப் அறைதான் பல குடிகாரர்களுக்கு பாராக விளங்குகிறது. இதை தடுக்க சிசிடிவி போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசு செய்தால் மட்டுமே இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காது என குடிநீர் வாரிய ஊழியர்கள் கூறுகின்றனர்.