சுரங்க வடிவில் பேராபத்து? நிபுணர் குழு எச்சரிக்கை | Wayanad | Landslide
சுரங்க வடிவில் பேராபத்து? நிபுணர் குழு எச்சரிக்கை | Wayanad | Landslide கேரளாவில் வயநாடு கோழிக்கோட்டை இணைக்கும் விதமாக 2,100 கோடி ரூபாயில் இரட்டைவழி சுரங்கப்பாதை அமைக்கப்பட இருக்கிறது. இதற்கான கட்டுமானப் பணிகள் இந்த மாதத்தில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் சுரங்கப்பாதை கட்டினால் நிலச்சரிவு அபாயம் ஏற்படும் என மாநில நிபுணர் மதிப்பீட்டுக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது அனக்கம்போயில் - கல்லடி - மேப்பாடி பகுதிகளை இணைத்து 10 கிலோ மீட்டருக்கு இரட்டைவழி சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வரும் பகுதியில் பெரும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக அறிக்கை சொல்கிறது. சுரங்கப்பாதை அமையும் பகுதிகளில் ஒன்றான திருவம்பாடி பஞ்சாயத்திற்குட்பட்ட 35.67 சதவீத பகுதிகள் மிதமான நிலச்சரிவு ஏற்படும் பகுதிகளாகும். அதேவேளையில் 26.54 சதவீத பகுதிகள் நிலச்சரிவால் அதிகம் பாதிக்கப்படும் என்றும், 0.96 சதவீத பகுதிகள் மிகவும் மோசமாக பாதிக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ளது. 2019ல் கனமழையினால் மாபெரும் நிலச்சரிவு ஏற்பட்ட புதுமலா கிராமம் சுரங்கப்பாதை அமையும் பகுதியில் இருந்து ஒரு கிலோ மீட்டருக்குள்ளாகவே உள்ளது. சுரங்கப்பாதை அமையும் இந்தப் பகுதிகளில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மழைக்காலங்களில் நிலச்சரிவு என்பது வாடிக்கையான ஒன்று. சுரங்க திட்டத்தை நிறைவேற்றும் பட்சத்தில் பெரிய இழப்புகளை ஏற்படுத்தும் அபாயம் இருக்கிறது என எச்சரிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் பல கிராமங்கள் மண்ணில் புதைந்தனர். 400க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் வயநாடு நிலைகுலைந்து போயிருக்கிறது. இந்த சூழலில் கேரளா முழுக்க நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.