அரசு கொள்கைகளை மறு பரிசீலனை செய்ய ஐகோர்ட் அறிவுறுத்தல் Wayanad | Landslide
அரசு கொள்கைகளை மறு பரிசீலனை செய்ய ஐகோர்ட் அறிவுறுத்தல் Wayanad | Landslide | High court of Kerala | Suggestions| Sue Motto Case | கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட நிலச்சரிவில் 200க்கு மேற்பட்டவர்கள் இறந்தனர். பலர் காணாமல் போயினர். மீட்கப்பட்டவர்கள் அரசு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலச்சரிவு தொடர்பாக கேரள ஐகோர்ட் நீதிபதிகள் ஜெயசங்கரன் நம்பியார், சியாம்குமார் அடங்கிய அமர்வு தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பான விசாரணையின் போது மாநில அரசுக்கு நீதிபதிகள் சில அறிவுறுத்தல்கள் வழங்கினர். மனிதனின் அக்கறையற்ற தன்மை மற்றும் பேராசைக்கு இயற்கை எதிர்வினை ஆற்றி உள்ளது. வயநாடு நிலச்சரிவும் அதற்கு ஒரு உதாரணம். நிலச்சரிவு வரும் என்பதற்கான எச்சரிக்கைகள் நீண்ட காலத்துக்கு முன்பே தோன்றிவிட்டது. ஆனால் கேரளாவின் பொருளாதார வளர்ச்சிக்காக அவற்றை புறக்கணித்துவிட்டோம். 2018, 2019-ல் ஏற்பட்ட இயற்கை பேரழிவுகள், கொரோனா தொற்று மற்றும் சமீபத்திய நிலச்சரிவு நம்முடைய வழிகளில் உள்ள பிழைகளை சுட்டிக்காட்டி இருக்கின்றன. நீடித்த நிலையான வளர்ச்சிக்கான, அரசின் இப்போதைய கொள்கைகளை சுய பரிசோதனை செய்ய வேண்டும். இயற்கை வளங்களை சுரண்டுதல், சுற்றுச்சூழல், காடுகள், விலங்குகளை பாதுகாத்தல், பேரிடர்களை தடுத்தல் போன்றவற்றிற்கான கொள்கைகளை நீதிமன்றம் பரிசீலனை செய்ய விரும்புகிறது. அரசு கொள்கைகளை மறுசீரமைப்பதில் கோர்ட் தலையீடும் இருக்கும். இதில் மூன்று கட்டமாக கோர்ட் தலையீடு இருக்கும். முதலில் சூழல் பாதிப்புள்ள பகுதிகளை அடையாளம் காண உதவிடும் அறிவியல் தரவுகள் சேகரிக்கப்படும். அதில் கவனம் செலுத்தப்பட்டு மாவட்டவாரியாக பாதிப்பு வரும் பகுதிகள் அறிவிக்கப்படும். வயநாடு நிலச்சரிவு மீட்பு, மறுவாழ்வு மற்றும் புனரமைப்பு வேலைகளை கோர்ட் ஒவ்வொரு வாரமும் கண்காணிக்கும். இரண்டாவதாக, பாதிக்கப்படும் பகுதிகளை ஒழுங்குபடுத்தும் ஏஜென்சிகள், ஆலோசனை குழுக்கள் குறித்த தரவுகள் சேகரிக்கப்படும். அதன் மூலம் இப்போதுள்ள சட்டங்கள், ஒழுங்குமுறைகள், விதிகளில் திருத்தங்கள் தேவைப்பட்டால் அவற்றை செய்து முடிக்கலாம். மூன்றாவதாக, பாதிப்புக்கு உள்ளாகும் பகுதி மக்களிடம் இருந்து, மாநில உள்ளாட்சித் துறை மூலம் தேவையான தகவல்களைப் பெற வேண்டும். அந்த தகவல்கள் மூலம் மாநிலத்தின் உள்கட்டமைப்பு வளர்ச்சி, சுற்றுலா போன்ற துறைகளில் புதிய கொள்கைகளை உருவாக்கலாம் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த ஆய்வுகளை அரசு நடத்த வேண்டும். மக்கள் கருத்தறியும் கூட்டங்களும் நடத்த வேண்டும் என நீதிபதிகள் கூறினர்.