கவிதா வழக்கில் சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி! | Kavitha Gets Bail | Supreme Court | Liquor Policy Ca
கவிதா வழக்கில் சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி! | Kavitha Gets Bail | Supreme Court | Liquor Policy Case டில்லி அரசின் மதுபான கொள்கையில் நடந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ, அமலாக்கத்துறை விசாரிக்கிறது. இதில் தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகளும், பி.ஆர்.எஸ் கட்சி தலைவருமான கவிதாவுக்கு தொடர்பு இருப்பதாக புகார் எழுந்தது. மார்ச் 15ல் கவிதாவை அமலாக்கத் துறை கைது செய்தது. டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட அவரை ஏப்ரல் 11ல் இதே வழக்கில் சிபிஐயும் கைது செய்தது. கவிதாவின் ஜாமின் மனு டில்லி ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. 6 மாதங்களாக கவிதாவின் கோர்ட் காவல் நீட்டிக்கப்பட்டு வந்தது. 2 வழக்குகளிலும் ஜாமின் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். கவிதாவின் வழக்கு நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வதான் ஆகியோர் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. கவிதா சார்பில் மூத்த வக்கீல் முகுல் ரோகத்கி ஆஜரானார். இதே வழக்கில் டில்லி முதல்வர் கெஜ்ரிவால், துணை முதல்வர் சிசோடியா கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர். சமீபத்தில் சிசோடியாவுக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கியது. சிசோடியாவுக்கு ஜாமின் வழங்கியதை உதாரணம் காட்டி கவிதாவிற்கும் ஜாமின் வழங்க வக்கீல் வாதிட்டார். கவிதா குற்றவாளி என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது. வழக்கில் நேர்மையாக விசாரணை நடந்ததா?. கவிதா ஏற்கனவே 5 மாதங்கள் சிறையில் உள்ளார். விசாரணை காவல் என்ற பெயரில் ஒருவருக்கு தண்டனை வழங்குவதை ஏற்க முடியாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை ஆகிய இரண்டு வழக்குகளிலும் கவிதாவுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டனர். சிசோடியாவை தொடர்ந்து டில்லி மதுபான ஊழல் வழக்கில் விடுதலையாகும் இரண்டாவது தலைவர் கவிதா. இதை எல்லாம் காரணம் காட்டி டில்லி முதல்வர் கெஜ்ரிவாலையும் ஜாமினில் எடுக்க அவரது கட்சியினர் முனைப்பு காட்டி வருகின்றனர். அமலாக்கத்துறை வழக்கில் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் கிடைத்தாலும் சிபிஐ தொடர்ந்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ளார். அவரது மேல்முறையீடு வழக்கு விசாரணையில் உள்ளது.