கவர்னர் ரவியுடன் அஜித் தோவல் ஆலோசனை! Ajit Doval | National Security Advisor of India|Governor Ravi
இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், கடந்த மாதம் 29ம் தேதி இலங்கை தலைநகர் கொழும்பு சென்றார். அங்கே வரும் 21ல் அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இந்த சூழலில் அங்கு நடந்த பாதுகாப்பு மாநாட்டில், தோவல் கலந்து கொண்டார். பின், அதிபர் ரணில் விக்ரமசிங்கேயை சந்தித்து, இரு நாட்டு உறவு குறித்து விவாதித்தார். முன்னதாக இந்தியா மற்றும் சீனாவின் போர் கப்பல்கள், ஒரே நேரத்தில் இலங்கை சென்று, பயிற்சியை முடித்து, 29ம் தேதி நாடு திரும்பியதும், பல கேள்விகளை எழுப்பியது. இப்பின்னணியில், அஜித் தோவல் அவசர பயணமாக இலங்கை சென்று திரும்பியுள்ளார். இந்நிலையில் அஜித் தோவல் நேற்று காலையில், தமிழக கவர்னர் ரவியுடன் அரை மணி நேரம் ஆலோசனை நடத்தினார். மாலை டில்லி திரும்பினார். கவர்னருடன் நடந்த ஆலோசனையில், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்படுவது குறித்தும், வங்க தேசத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவில் தமிழகத்தில் ஊடுருவுவது குறித்தும் விரிவாக பேசப்பட்டதாக தெரிகிறது. சமீபத்தில் அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, வங்கதேசத்தில் இருந்து அசாம் வழியாக இந்தியாவுக்குள் நுழையும் அகதிகள், தமிழகம் மற்றும் தென் மாநிலங்களில் குடியேறுகின்றனர். இது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என, தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியதாக கூறியிருந்தார். இதற்கு முன்பும் சில முறை அஜித் தோவல் தமிழகம் வந்து, கவர்னரை சந்தித்து பேசினார். அப்போது கவர்னர் மாளிகை தரப்பில், எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. நேற்றைய சந்திப்பு புகைப்படம் மட்டும், அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.