மகா விஷ்ணு உடைத்த சித்தர்கள் ரகசியம்-முழு பின்னணி Maha Vishnu arrest video
மகா விஷ்ணு உடைத்த சித்தர்கள் ரகசியம்-முழு பின்னணி Maha Vishnu arrest video | Maha vishnu confession சென்னை பள்ளிகளில் தன்னம்பிக்கை வகுப்பு எடுக்க சென்ற ஆன்மிக சொற்பொழிவாளர் மகா விஷ்ணு, பாவ, புண்ணியம் பற்றி பேசினார். அவரது பேச்சு சர்ச்சையாக வெடித்த நிலையில் அவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மாற்றத்திறனாளிகளை அவமதித்தது, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதியப்பட்டது. மகா விஷ்ணுக்கு 30 வயது தான் ஆகிறது. குறுகிய காலத்தில் 5 நாடுகளில் அறக்கட்டளை நிறுவி ஆன்மிக சொற்பொழிவு நடத்தி வந்தார். சித்தர்கள் தன்னிடம் சொன்னதை மாணவர்களிடம் பேசியதாக மகா விஷ்ணு வாக்குமூலம் அளித்தார். அவரது வாக்குமூலம் பற்றி சில தகவல்கள் தான் முதலில் கசிந்தது. இப்போது முழு விவரமும் வெளியாகி உள்ளது. சிறு வயதில் காமெடியனாக உலகுக்கு அறிமுகமாகி, இவ்வளவு பெரிய ஆன்மிக சொற்பொழிவாளராக வளர்ந்தது எப்படி? தினமும் சித்தர்களிடம் பேச ஆரம்பித்தது எப்படி என்பது பற்றியெல்லாம் விவரமாக மகா விஷ்ணு வாக்குமூலம் அளித்துள்ளார். அவர் போலீசில் அளித்த வாக்குமூலம்: பள்ளிகளில் நடந்த பேச்சு போட்டியில் பங்கேற்று பரிசுகளை குவித்துள்ளேன். டிவி சேனல் ஒன்றில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில், ஸ்டாண்ட் அப் காமெடியனாக புகழ் பெற்றேன். அதன்பின் எனக்கு ஆன்மிகத்தில் நாட்டம் ஏற்பட்டது. அது தொடர்பான நுால்களை வாசித்து வந்தேன். சித்தர்கள் குறித்த ஆராய்ச்சியிலும் ஈடுபட்டேன். கடந்த 2020ல் மனித உயிர்களை கொரோனா அச்சுறுத்திய போது, ஆன்மிகம் மற்றும் அறநெறி கருத்துகளை பேசி யூடியூப்பில் வீடியோக்கள் வெளியிட்டேன். அதன் பலனாக இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ள ஆன்மிக பற்றாளர்களின் நன்மதிப்பை பெற்றேன். என் பேச்சு எவரையும் கெடுக்கும் வகையிலோ, கோபப்படுத்தும் வகையிலோ இருக்காது; சிந்திக்க வைக்கும் வகையிலேயே இருக்கும். சித்தர்கள் வகுத்து தந்த வழியில் வாழ்ந்து வருகிறேன். என் சுய பரிசோதனையில் கிடைத்த ஞானத்தின் அடிப்படையில் பல நாடுகளுக்கும் சென்று பேசி வருகிறேன். 2021ல் திருப்பூரில் பரம்பொருள் பவுண்டேஷன் என்ற அறக்கட்டளையை துவங்கி, ஆன்மிக தேடலுக்கான கட்டண வகுப்புகளை நடத்தி வருகிறேன். உளவியல் ரீதியாக சிறைபட்டு சின்னாபின்னமாகி இருக்கும் மனித வாழ்வை மீட்டெடுப்பது தான் என் இலக்கு. அதற்காக மகாவிஷ்ணு ஸ்ட்ரெஸ் பிரீ என்ற நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறேன். என் அன்பர்களுக்கு குருவின் கருணை என்ற பெயரில் ருத்திராட்சம், கருங்காலி மாலை உள்ளிட்ட பொருட்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்தும் வருகிறேன். சித்தர்கள் தான் நம் சொத்து. அவர்கள் வாழ்வியல் சார்ந்து ஏராளமான கருத்துகளை விட்டுச் சென்றுள்ளனர். அவர்களோடு தினமும் பேசுவேன். பாவ, புண்ணியம் குறித்து அவர்கள் சொன்ன கருத்தையே மாணவ, மாணவிகளிடம் போதித்து வருகிறேன். மாற்றுத்திறனாளிகள் குறித்த என் பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டது என்று மகா விஷ்ணு வாக்குமூலம் அளித்துள்ளார்.