தவெக அரசியல் ஆட்டம் நேரம் பார்த்து ஆபர் TVK| actor vijay| ilaya thalapathy| BJP
தவெக அரசியல் ஆட்டம் நேரம் பார்த்து ஆபர் TVK| actor vijay| ilaya thalapathy| BJP நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் சேர, பாஜவில் உள்ள சினிமா பிரபலங்கள் பேச்சு நடத்தி வருவதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து பாஜ வட்டாரங்கள் கூறியதாவது: காங்கிரசில் இருந்து விலகி பாஜவில் சேர்ந்த நடிகை குஷ்பு, 2021 சட்டசபை தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு, திமுக வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். பின்னர், தேசிய செய்தி தொடர்பாளர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்த குஷ்புவுக்கு, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. சமீபத்தில், தனது பதவியை ராஜினாமா செய்ததுடன், திமுகவுக்கு எதிராக தீவிர பிரசாரம் செய்ய இருப்பதாக தெரிவித்தார். நடிகர் சரத்குமார், லோக்சபா தேர்தலின்போது தான் நடத்தி வந்த சமத்துவ மக்கள் கட்சியை, பாஜவில் இணைத்தார். அவரது மனைவியும், நடிகையுமான ராதிகா, விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். நடிகர் செந்தில், நடிகை நமீதா, நடிகர் ராதாரவி, இசை அமைப்பாளர் கங்கை அமரன் என பல சினிமா பிரபலங்கள் பாஜவில் உள்ளனர். இவர்கள் அனைவரும், கட்சியில் தங்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்ற அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவக்கியுள்ளார். இம்மாதம் கட்சியின் மாநாட்டை விஜய் நடத்த உள்ளார். பாஜவில் உள்ள சினிமா பிரபலங்கள், மற்றும் முக்கிய நிர்வாகிகள் கட்சித் தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் விபரம் அறிந்து கொண்ட விஜய் கட்சி நிர்வாகிகள் சிலர், அவர்களை தவெகவுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் பரவி இருக்கிறது. இதனால், பாஜவில் தங்களுக்கு எந்த பதவியும் அளிக்கப்படாததால், அதிருப்தியில் உள்ள முக்கிய நிர்வாகிகள், விஜய் கட்சியில் இணைவது குறித்து பேச்சு நடத்தி வருவதாக தெரியவந்து உள்ளது.